அஸ்துமா மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோயாளிகள் கவனிக்க வேண்டிய விடயங்கள்.?
24 Aug,2023
அஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள், சுவாசப்பதில் சிக்கல்கள், நாட்பட்ட நுரையீரல் நோயாளிகள் ஆகியோர் இன்ஹேல் தெரபி எனும் நிவாரண சிகிச்சையே மேற்கொண்டிருப்பார்.
இத்தகைய சிகிச்சையை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் போது இதில் உள்ள பக்க விளைவுகள் குறித்தும், பக்க விளைவுகளற்ற நவீன கருவிகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என இத்துறை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக இன்ஹேல் தெரபி என்பது மூச்சு திணறல் அல்லது சுவாசிப்பதில் பாரிய சிக்கல் இருப்பவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் சிகிச்சை முறை.
இத்தகைய இன்ஹேல் தெரபி- இன்ஹேலர் மற்றும் நெபுலைசர் ஆகிய கருவிகளின் மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது இந்த கருவிகளின் ஊடாக மருந்துகள் நேரடியாக நுரையீரலுக்கு செலுத்தப்பட்டு, உடனடியாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
இத்தகைய இன்ஹேலர் கருவியை பயன்படுத்தும் போது எம்மில் பலரும் பல நுட்பமான விடயங்களை அவதானிக்க தவறுகின்றனர். இத்தகைய கருவி மீட்டா பேஸ்டு இன்ஹேலர் என்றும், பவுடர் பேஸ்டு இன்ஹேலர் என்றும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. நெபுலைசர் எனப்படும் கருவி, மூன்று வகைகளில் கிடைக்கிறது.
இன்ஹேலர் மற்றும் நெபுலைசர் கருவிகள் மூலமாக நீங்கள் மருந்துகளை உட்கொள்ளும் போது உங்களுடைய சுவாசித்தல் திறனும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஏனெனில் இத்தகைய மருந்துகள் வாய் வழியாக செலுத்தப்படும் போது நுரையீரல் பகுதிக்கு மருந்து சென்றாலும்.. சிறிய அளவிலான மருந்துகள் வாய் பகுதியில் இருக்கும் என்பதால்.. இத்தகைய இன்ஹேல் தெரபி மூலம் இரண்டு அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் ஐந்து என்ற எண்ணிக்கை வரையில் வாய் வழியாக மருந்தை உட்கொண்ட பிறகு.. எம்முடைய வாயை சுத்தமான நீரால் கொப்பளித்து துப்ப வேண்டும்.
அதேபோல் நெபுலைசர் எனும் கருவியின் மூலமாக மருந்தினை உட்செலுத்தி கொள்பவர்கள் சுவாசத்தின் போதும்... அதாவது காற்றை உள்ளிழுக்கும் போதும்.. காற்றை வெளியே விடும் போதும்.. மருந்து தொடர்ந்து செயல்படுவதால், பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. எனவே இத்தகைய கருவியை பயன்படுத்தும் போதும் அதில் குறிப்பாக ஸ்டீராய்டு கலந்த மருந்தினை பாவிக்கும்போது மருத்துவரின் எச்சரிக்கை ஆலோசனையை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
தற்போது பல்வேறு வகையினதான கருவிகள் சந்தையில் அறிமுகமாகி இருப்பதால், அதனை எவ்வாறு பாவிப்பது என்பது குறித்து முழுமையான விழிப்புணர்வுடன் அறிந்து கொண்டு அதனை பாவனை செய்ய வேண்டும்.