நீரிழிவு. மாத்திரைகள் பக்க விளைவை ஏற்படுத்துமா...?
20 Aug,2023
பாமரர்கள் முதல் மெத்த படித்தவர்கள் வரை..நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசியை தொடர்ந்து பாவிப்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமோ..! என்ற ஐயத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இது தொடர்பான சந்தேகங்களை மருத்துவர்களிடம் எழுப்புகிறார்கள். இது தொடர்பான முழுமையான விளக்கத்தை நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் பின்வருமாறு வழங்குகிறார்கள்.
Nephrotoxic drugs, வலி நிவாரணிகள் புற்றுநோயிற்கான மருந்துகள், ரத்த பாதிப்புக்கான சில மருந்துகள் போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரை இன்றி தொடர்ச்சியாக பொதுமக்கள் பாவித்தால்.. சிறுநீரகம் பாதிக்கப்படுவது உறுதி. ஆனால் பாதிப்பின் அளவு குறித்து எதுவும் உறுதியாக குறிப்பிட இயலாது. ஆனால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசிகள் ஆகியவை சிறிய ரத்தக் குழாய் மற்றும் பெரிய ரத்தக் குழாய் எனப்படும் Macro vascular மற்றும் micro vascular ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதால் இவை சிறுநீரகங்களை ஒருபோதும் பாதிப்பதில்லை. மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தும் மருந்து, மாத்திரைகள் ஆகியவை அனைத்தும் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுவதால் அவை சிறுநீரகத்தை பாதிப்பதில்லை என உறுதியாக சொல்ல இயலும்.
அதே தருணத்தில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தாதவர்களில் இருவரில் ஒருவருக்கு அவர்களின் சிறுநீரகம், சிறுநீரக செயல் திறன், சிறுநீரக இயங்குத்திறன்.. என ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.