சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு . நவீன சிகிச்சை.
17 Aug,2023
பெண்மணிகள் சிலருக்கு இருமினாலோ அல்லது தும்மினாலோ அவர்களுக்கு திடீரென்று சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படும்.
மனதளவிலும், சமூக ரீதியாகவும் பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது ஸ்கல்ப்டிங் எனப்படும் நவீன சிகிச்சை மூலம் முழுமையாக நிவாரணமளிக்க இயலும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிரசவத்திற்குப் பிறகு சில பெண்மணிகளுக்கு சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் இத்தகைய பாதிப்பின் காரணமாக சமூகத்துடன் உறவு கொள்வதில் பாரிய உளச்சிக்கல் ஏற்படுகிறது.
இவர்கள் எப்போதும் இதற்காக பிரத்யேக Pad ஒன்றை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
ஆண்களில் சிலருக்கு கட்டுப்படுத்த இயலாத இரத்த சர்க்கரையின் அளவு காரணமாக அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது விறைப்புத்தன்மை இல்லாமல் மனதளவில் பாரிய பாதிப்பினை எதிர்கொள்கிறார்கள்.
இவர்களுக்கான சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை தான் இந்த ஸ்கல்ப்டிங் எனப்படும் சிகிச்சை.
இந்த சிகிச்சையின் போது இவர்களுக்கு அதிர்வலைகளின் மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி தசைகளை வலுப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
மேலும் இதன்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது முழுமையான நிவாரணம் கிடைக்கிறது.
இத்தகைய சிகிச்சையை நாளாந்தமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ அரை மணி தியாலம் ஒதுக்கி மேற்கொண்டால் போதுமானது.
மேலும் இத்தகைய சிகிச்சை இதய பாதிப்பிற்காக பேஸ்மேக்கர் எனும் கருவியை பொருத்திக் கொண்டவர்களுக்கும், காது கேளாமை பாதிப்பிற்காக காக்ளியர் இம்பிளான்ட் எனும் கருவியை பொருத்திக் கொண்டவர்களுக்கும், உடலில் வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக உலோகங்களை பொருத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் மேற்கொள்ள பரிந்துரைக்க மாட்டார்கள்.
மேலும் உடல் எடை குறைவதற்கும் இத்தகைய சிகிச்சை பலனளிக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.