நோய்வாய்ப்படும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கேற்ப சி டி ஸ்கேன் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சி டி ஸ்கேன் பரிசோதனை குறித்து பொது மக்களிடம் தவறான நம்பிக்கைகள் இன்றளவும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக இத்தகைய பரிசோதனையை மேற்கொண்டால் புற்றுநோய் தாக்கம் ஏற்படும் எனும் அச்சம் ஒரு பிரிவு மக்களிடம் இருக்கிறது.
இந்நிலையில் சி டி ஸ்கேன் பரிசோதனை குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
சி டி ஸ்கேன் என்பது, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உங்களுடைய உறுப்புகளில் எங்கேனும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதும், அவை எங்கு எங்கு பரவி இருக்கிறது? என்பதையும் துல்லியமாக அவதானிக்கக்ககூடிய பரிசோதனை. மேலும் புற்றுநோய் பாதிப்பினை நீக்குவதற்கு எம்மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் இத்தகைய சி டி ஸ்கேன் பரிசோதனைகளின் முடிவுகள் அவசியமாகிறது.
எம்மில் பலருக்கும் எக்ஸ்ரே எனும் பரிசோதனையை அறிந்திருப்பர். அந்த எக்ஸ்ரே பரிசோதனையை போல் பத்தாயிரம் மடங்கு கூடுதலான கதிர்களால் உடலின் உட்பகுதியில் ஊடுருவி எம்மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை முப்பரிமான வடிவத்தில் துல்லியமாக விளக்குவதற்கு இத்தகைய சி டி ஸ்கேன் பரிசோதனை பயன்படுகிறது.
சி டி ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்வதால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுகிறது என கடந்த காலங்களில் அறிவியல் ரீதியான முடிவுகள் இருந்தது.
ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் இத்தகைய சி டி ஸ்கேன் கருவியில் நோயை கண்டறியும் நிபுணர்கள், ALARA ( As Low As Reasonably Achieveable) எனும் நவீன உத்தியை பயன்படுத்தி இத்தகைய பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். மேலும் இதன் போது நேரம், தூரம், பாதுகாப்பு, குறைக்கப்பட்ட அளவு.. ஆகிய காரணிகளை துல்லியமாக கணக்கிட்ட பிறகுதான் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் பக்க விளைவு மிக மிக அரிது என உறுதியாக சொல்கிறார்கள்.
இத்தகைய சிடி ஸ்கேன் அதாவது கம்ப்யூட்டர் டெமோகிராபி ஸ்கேன் பரிசோதனை என்பது பெரும்பாலும் புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே தருணத்தில் உடலின் உட்பகுதியில் எந்த இடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிக்க எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எம்மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது எம் ஆர் ஐ எனப்படும் காந்த அலையினால் உண்டாக்கப்படும் கதிர்வீச்சு மூலமான பரிசோதனை மேற்கொள்ளும்போது அதிலிருந்து வெளியாகும் ஒலியின் அளவை குறைப்பதற்கான புதிய உத்திகளும் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
எனவே நோயாளிகள் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மற்றும் சி டி ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை துல்லியமாக உணர்ந்து கொண்டு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை எந்தவித பக்க விளைவுக்கான அச்சமும் இல்லாமல் மேற்கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கிறார்கள்.