எம்மில் சிலருக்கு வயதிற்கு வந்த பிறகு அவர்களுடைய கழுத்தின் பின்பகுதியில் தோல் தடிப்பமாக மாறிவிடும். அத்துடன் சாம்பல், பழுப்பு, கருப்பு போன்ற வண்ணங்களில் தோன்றும். இவை கழுத்தின் பின்பகுதியில் மட்டுமல்லாமல் அக்குள், மார்பகத்தின் கீழ் பகுதிகளில் ஏற்படும்.
இவை இன்சுலின் சுரப்பில் ஏற்பட்டிருக்கும் சமச்சீரற்ற தன்மையின் அறிகுறி என வகைப்படுத்தப்படுவதால், இத்தகைய அறிகுறி ஏற்பட்டால் அவர்கள் சர்க்கரை நோய் பாதிப்பின் தொடக்க நிலை அல்லது அடிப்படை நிலையில் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனை மருத்துவ மொழியில் அகந்தோசிஸ் நிக்ரிகன் என குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய திகதியில் பாரம்பரிய மரபணு மாற்றம் காரணமாக பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் பத்து வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். எம்மில் சிலர் இதற்கு நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி தான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் இது தவறான விடயம். ஏனெனில் நாம் பிராய்லர் கோழியை அதிக வெப்பத்தில் சூடு படுத்தி சாப்பிடுகிறோம். இந்த அதிக வெப்பத்தின் போது பிராய்லர் கோழியில் உள்ள வேதியல் பொருட்கள் மறைந்து விடுகின்றன. இதனால் உடலுக்கு எந்த கெடுதியும் ஏற்படுவதில்லை. அதே தருணத்தில் பத்து வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துகிறார்கள் என்றால் அவர்களின் உடல் எடை இயல்பான அளவைவிட கூடுதலாக இருப்பதும் ஒரு காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்நிலையில் பத்து வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு அவர்களின் கழுத்தின் பின்பகுதி, முழங்கை, முழங்கால், கணுக்கால், அக்குள் போன்ற பகுதிகளிலுள்ள தோலில் மாற்றங்கள் ஏற்பட்டால்.., அவர்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும். அதாவது இவர்களுக்கு இன்சுலின் சுரப்பில் சமச்சீரற்ற தன்மை ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பிற்கு பெரும்பாலும் தோல் மருத்துவத்திற்குரிய சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறுகிறார்கள். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை மேற்கொள்ள தவறினால் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
சிலருக்கு இத்தகைய பகுதிகளில் ஏற்படும் தோல் நிற மாற்றம் வறட்சியாகவும், இயல்பை மீறிய தடிமனாகவும், அரிப்பு ஏற்படக்கூடியதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருந்தாலோ அல்லது இதன் போது உங்களுடைய நகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும்.
இன்சுலின் சுரப்பியில் சமசீரற்ற தன்மை, பாரம்பரிய மரபணு மாற்றக் குறைபாடு, ஹோர்மோன் சுரப்பியின் மாற்றங்கள் மற்றும் ஏனைய மருந்தியல் சிகிச்சையின் பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய அகந்தோசிஸ் நிக்ரிகன் பாதிப்பு ஏற்படலாம்.
மருத்துவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும், தோலில் ஏற்படும் மாற்றங்களை குறைப்பதற்குரிய சிகிச்சைகளையுமா பரிந்துரைப்பர். சிலருக்கு சிகிச்சைகள் இல்லாமல் இந்த நிலை காலப்போக்கில் மாறக்கூடும். வேறு சிலருக்கு இந்த பாதிப்பு ஹைபர் பிக்மென்டேஷன் என்ற பாதிப்பாகவும், ஹைப்பர்கெரோட்டோசிஸ் என்ற பாதிப்பாகவும் மாறக்கூடும். இதனால் மேற்கூறிய பகுதிகளில் உள்ள தோலில் நிற மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.