கட்டுப்படுத்த இயலாத சர்க்கரையினால் வலிகள்
29 Jul,2023
எம்மில் பலரும் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்குரிய முழுமையான விழிப்புணர்வை பெற்றிருக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாததன் காரணமாக எம்முடைய உடலில் பல இடங்களில் வலிகள் அறிகுறிகளாக தென்படுகின்றன. குறிப்பாக பல்வலி, தோள்பட்டை வலி, நெஞ்சக வலி, கால் வலி, குதிகால் வலி... என பல வலிகள் சர்க்கரையை கட்டுப்படுத்தாததன் காரணமாக உருவாகின்றன என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பலரும் திடீரென்று பல் வலியால் பாதிக்கப்படுவர். இவர்களுக்கு பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலும்... ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் அதன் எதிரொலியாக பல், ஈறு போன்றவற்றில் வலி உண்டாகிறது. இதற்கு பல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிப்பதற்கும் முன் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் இந்த பல் வலி குணமடையும் என்பர்.
அதே தருணத்தில் எம்மில் பலருக்கும் குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு வலது அல்லது இடது தோள்பட்டையில் திடீரென்று வலி ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் ஃப்ரோசன் சோல்டர் அல்லது பெரிஆர்த்திடிஸ் சோல்டர் என குறிப்பிடுவர். இந்த வலி.. ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதன் காரணமாக ஏற்படுகிறது. தோள்பட்டை வலி ஏற்படுபவர்களில் 30 சதவீதத்தினருக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாததால் ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் தோள்பட்டை வலி குணமாகும்.
வேறு சிலருக்கு மார்பு பகுதியின் மையத்தில் வலி ஏற்படும். இவையும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாததால் தான் ஏற்படுகிறது. வேறு சிலருக்கு diabetic autonomic neuropathy , truncal neuropathy ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இவை அனைத்தும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாததால் உண்டாகும் பாதிப்புகளாகும்.
வேறு சிலருக்கு கால் பகுதியில் குத்தலுடன் கூடிய வலி... எரிச்சலுடன் கூடிய வலி.. குதிகால் வலி.. போன்றவை திடீரென்று இரவு நேரங்களில் ஏற்படக்கூடும். இவை அனைத்தும் உங்களுடைய உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளாகும். இவைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதைத் தவிர்த்து உங்கள் உடலில் வேறு சில பகுதிகளில் வலி ஏற்படும். இதற்கும் ரத்த சர்க்கரையின் அளவிற்கும் தொடர்பு இருப்பதால், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.