குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் பால்மர் கிராஸ்ப் ரிஃப்ளெக்ஸ் பரிசோதனை
29 Jul,2023
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்குள் பல்வேறு பரிசோதனைகள் மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்நிலையில் குழந்தை பிறந்து நான்கு மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் பால்மர் கிராஸ்ப் ரிஃப்ளெக்ஸ் எனும் நரம்பியல் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை குழந்தைகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் பல வகையான பரிசோதனைகளில் ஒரு பிரிவாகும்.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் மூன்று மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் அவர்களுடைய மூடிய கை விரல்களுக்குள் பெற்றோர்கள் அல்லது மற்றவர்களின் கைவிரலை கொடுத்தால்.. அதனை இறுக பற்றிக் கொள்வார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு இத்தகைய இறுக பற்றி கொள்தல் என்பது இருக்காது. அதாவது உள்ளங்கை பிடிப்பு என்பது முழுமையாக இருக்காது. இவர்களுக்கு மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை வழங்கி இத்தகைய பாதிப்பினை மீட்டெடுப்பார்கள்.
கருத்தரித்திருக்கும் காலகட்டத்திய மன அழுத்தம், பிரசவகால எதிர்ப்பாராத நெருக்கடிகள், சத்திர சிகிச்சை பாணியிலான குழந்தை பிறப்பு, குழந்தை பிறக்கும் போது மூளையின் ஏற்படும் காயம், குறை பிரசவத்தில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், குழந்தை பிறந்து ஓராண்டிற்குள் தொற்று நோய்க்கு ஆளாகுதல், ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அவர்களது பெருமூளை பகுதியில் காயங்கள் ஏற்பட்டு, இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய குறைபாட்டினை மோட்டார் இயங்குதிறன் குறைபாடு என்றும் முதுகு தண்டிலிருந்து கைகளின் நரம்புகளுக்கு உணர்வுகளை கடத்த வேண்டிய நரம்பில் ஏதேனும் இடையூறு காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் மூளை பகுதிக்கு கிடைக்க வேண்டிய ஒக்சிஜன் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகளின் உள்ளங்கை பிடிப்பில் ஏற்பட்டிருக்கும் வேறுபாடு குறித்த இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவர்கள் சில சிகிச்சைகள் அளித்து இதற்கு நிவாரணத்தை அளிக்கிறார்கள். அனிச்சையாக நடைபெறும் இத்தகைய செயல்களில் ஏதேனும் தளர்வு ஏற்பட்டிருந்தால், அதற்கு மருத்துவர்கள் பிரத்யேக சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்குகிறார்கள்.