சிறுநீரக பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கும் றொபாட்டிக் சத்திர சிகிச்சை
28 Jul,2023
.
கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையில் றொபாட்டிக் சத்திர சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல பலனை வழங்கி வருகிறது.
மேலும் மருத்துவ அறிவியலில் றொபாட்டிக் எனும் இயந்திரத்தின் வழியிலான சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது சிறுநீரகம் தொடர்பான சிக்கலை களைவதற்கும் றொபாட்டிக் சத்திர சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பலரும் றொபாட்டிக் சத்திர சிகிச்சை என்றால் ரோபோ எனும் இயந்திரம் தானாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் என எண்ணுகிறார்கள்.
இது தவறு. மருத்துவ நிபுணருக்கு றொபாட்டிக் எனும் இயந்திரம் சத்திர சிகிச்சை எளிமையாக மேற்கொள்வதற்கு வழி காட்டுகிறது. குறிப்பாக எம்முடைய உடலின் உட்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியினை துல்லியமாக கண்டறிந்து, அதனை முப்பரிமாண வடிவத்தில் புகைப்படங்களாக வெளிப்படுத்தி, சத்திர சிகிச்சையை நூறு சதவீதம் தெளிவாக மேற்கொள்வதற்கு வழி காட்டுகிறது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் துல்லியமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதன்போது ரத்த இழப்பு குறைவு.
மருத்துவமனையில் தங்கும் காலகட்டமும் குறைவு. விரைவாக இயல்பான வாழ்க்கை நடைமுறைக்கு திரும்ப இயலும். பக்க விளைவுகள் மிக மிகக் குறைவு.. என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் பலரும் தற்போது றொபாட்டிக் மூலமான சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
தற்போது றொபாட்டிக் வடிவிலான சத்திர சிகிச்சை சிறுநீரக பாதிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் விரிவாக்கம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு றொபாட்டிக் சத்திர சிகிச்சை நல்ல பலனை வழங்கி வருகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட கட்டிகள் முழுமையாக அகற்றப்படுவதுடன், அதன் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது ஏழு சென்டிமீற்றருக்கும் குறைவாக சிறிய அளவில் துளையிடப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வலியும் குறைவாகவே இருக்கிறது.
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஓராண்டு காலம் வரை தொடர்ச்சியாக அவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்கள் அறிவுறுத்திய நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.