இதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களில் மட்டும் அடைப்பு ஏற்படுவது ஏன்?
23 Jul,2023
உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர். ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.
கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது.
ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம்.