அதிகம் தண்ணீர் குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா..! மருத்துவர்கள் சொல்வது இதுதான்..!
நம் உடலில் முக்கால் பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திடமான உணவுகள் இல்லாமல் கூட உயிர்வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்வதற்கு அடித்தளமாக இருப்பது நம் உடலில் உள்ள நீர்சத்துதான். இது, நம் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமன்றி நம் ஆயுளையும் நீட்டிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட ஆயுள்காலம் என்றால் என்ன..?
நாம் நீண்ட நாள் உயிர்வாழ்வது நம் உடல் நலனை பொருத்தும் நம் கால சூழ்நிலைகளை பொருத்தும்தான் இருக்கிறது. இவை தவிர, நாம் எத்தனை வருடங்கள் உயிர்வாழ்கிறோம் என்பதை நமது பாலினம், நமது வாழ்வியல் முறை, நம் பரம்பரை போன்றவை தீர்மானிக்கின்றன.
பெரும்பாலான நம் பாட்டன் பாட்டி, தாத்தா பாட்டி எல்லாம் 2-3 தலைமுறைகளை பார்த்த பின்புதான் கண்ணை மூடியிருப்பர். அதற்கு காரணம், அவர்கள் இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்ந்ததும் உட்கொள்ளும் உணவுகளில் கலப்படம் இல்லாமல் இருந்ததும்தான் அதற்கு காரணம். 120-150 வருடங்கள் என்றிருந்த மனிதனின் வாழ்நாள் கணக்கு, கடந்த 2020ஆம் ஆண்டின் படி 70 வயதிற்கு வந்துவிட்டது.
வாழ்வதற்கு தேவையான ஆதாரம்-நீராதாரம்:
நீர் வாழ்வுக்கு இன்றியமையாதது. மனிதன் தோன்றியது முதல் அவன் கடைப்பிடித்து வரும் விஷயங்களில் ஒன்று தண்ணீர் குடிப்பது. இது இல்லாமல் மனிதர்களால் சில காலம் மட்டுமே உயிர்வாழ முடியும். உடலில் உள்ள கெட்ட நீரை அகற்றி உடல் உறுப்புகளுக்கு நல்ல நீர் செல்ல வழி செய்வது, நாம் அருந்து தண்ணீர்தான். உடலில் வெப்பம் சீராக இருக்கவும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் தண்ணீர் உதவுகிறது.
சில மணி நேரம் தண்ணீர் அருந்தவில்லை என்றால், கூட நம் உடலில் நீர் சத்து குறைந்துவிடும். அதனால், எப்போதும் தேவையான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் நம் ஆயுளை அதிகரிக்குமா?
நல்ல தண்ணீரை தினமும் தேவையான அளவு குடிப்பது நம் உடல் நலனை சிறப்பாக பேணுவதில் நமக்கு உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். உடலில் நீர்சத்து அதிகமாக இருந்தால், உள்ளிருக்கும் உறுப்புகள் சுத்தமாக இருக்கும். இதனால், நோய் பாதிப்புகள் குறையும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது இருதய நோய்களை தவிர்க்கும் என்கின்றார் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். நுரையீரல் குறைபாடு, ரத்த சுத்திகரிப்பு என தண்ணீர் செய்யும் வேலைகள் பல உள்ளன. நிறைய தண்ணீர் குடிப்பதனால் நம் உடலில் உள்ள சிறுநீர் பையில் புற்றுநோய் வராமல் பார்த்துக்கொள்ள 45-50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாம்.
சருமத்திற்கும் நல்லது:
நன்றாக தண்ணீர் குடிப்பதால், வெயில் காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராதாம். உள்ளிருக்கும் செல்களை பாதுகாக்கும் தண்ணீர் உங்கள் சரும செல்களையும் நீங்கள் அதிகம் தண்ணீர் குடித்தால் பாதுகாக்குமாம். இதனால்தான், ஆவி பிடித்த பிறகோ அல்லது நன்கு வியர்த்த பிறகோ உங்கள் முகம் ஒருவித பொலிவை பெறும். நன்கு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தில் எளிதில் சுருக்கம் விழாமல் பார்த்துக்கொள்ளுமாம்.
நிறைய தண்ணீர் குடிக்க சில டிப்ஸ்:
-நீங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு பாட்டில் தண்ணீரை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். அதை உங்கள் கண்படும் இடத்தில் வைத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்து கொண்டே இருக்கும்.
-சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிடுவது நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். சாப்பிட்ட உணவையும் செரிமானம் செய்யும்.
-தண்ணீர் மட்டுமே குடிக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை லெமன் டீ அல்லது ப்ளாக் டீ வடிவிலும் குடிக்கலாம்.
-உங்கள் தண்ணீரில் நீங்கள் வேறு எதையாவது இலை அல்லது இயற்கை பொருட்களை போட்டும் குடிக்கலாம். உதாரணத்திற்கு ஜீரகம் போட்டு தண்ணீர் குடித்தால் உங்களுக்கு செரிமான கோளாறு உண்டாகாது.
-நீர்சத்து உள்ள காய்கறிகள் அல்லது பழங்களையும் நீங்கள் தண்ணீருக்கு பதிலாக சாப்பிடலாம். வெள்ளரிக்காய், லெமன், ஆரஞ்சு போன்றவை நீர்சத்து அடங்கிய பழ லிஸ்டில் அடங்கும்.