எலும்புப்புரை நோயை தடுக்கும் வழிகள் என்ன என்பது குறித்து கடலூர் முதுநகரில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள மனோன்மணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரவீன் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:- முதலில் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரராசிஸ்) என்றால் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, எலும்புப்புரை என்பது எலும்புகளை பலவீனமாக்க கூடியதாகும். இதன் விளைவாக எலும்புகள் மெல்லியதாகி அவை உடைந்து போகின்றன.
உடலில் பழைய எலும்புகளுக்கு பதிலாக புதிய எலும்புகள் வளர தவறும்போது எலும்புப்புரை நோய் ஏற்படுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். இந்த நோய் உள்ளவர்கள், எலும்பு முறிவுகளால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள்.
யாருக்கெல்லாம் வர வாய்ப்பு புகை பிடிப்பவர்கள், மது அருந்துதல் பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சிகள் இல்லாத வாழ்க்கை முறை, தைராய்டு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையில் உள்ளவர்கள்.
இவை அனைத்தும் மாற்றக்கூடிய காரணிகளாக உள்ளன. குறைந்த வயதில் மாதவிடாய் நின்று போகுதல், மரபியல் மற்றும் நாளமில்லா சுரப்பி பிரச்சினை உள்ளவர்கள், முடக்கு வாதம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களை மாற்ற இயலாத ஒன்றாகும்.
எலும்பு முறிவுகள் தோள்பட்டை, முதுகு தண்டுவடம், இடுப்பு மற்றும் கை மணிக்கட்டு எலும்பு முறிவுகள் அதிகமாகும்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய்வர வாய்ப்பு உள்ளது.
இதனை கண்டறிய எலும்பு தாது பொருள் அடர்த்தி கண்டறிதல், ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவு, டெக்ஸா ஸ்கேன், ரத்தத்தில் எலும்பு மார்க்கர் அளவு போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
தீர்வு என்ன? எலும்புப்புரை நோய்க்கான காரணங்களை கண்டறிந்து, அதனை குறைப்பது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது.
மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்து மாத்திரைகள் உட்கொள்வது இதற்கு உகந்த சிகிச்சை முறைகள் ஆகும்.
அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், ஒருவர் தமக்கு எலும்புப்புரை நோய் உள்ளதா? இல்லையா? என அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் எலும்பு முறிவுகள், மேலும் நடக்க முடியாமல் போவது, மருத்துவ செலவினங்கள் வாழ்க்கை முறை மாற்றம், போன்றவைகளில் இருந்து விடுபடலாம்.
பலர் தங்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பின்னரே, இது போன்ற நோய் இருப்பதை தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.
மேலும் பலரும் இது பெண்களுக்கு மட்டும் வரும் நோய் என்று நம்பி உள்ளனர். ஆனால் இது ஆண்களுக்கும் வரும். இவ்வாறு அவர் கூறினார்.