ஹைட்ரோனெஃபிரோஸிஸ் எனும் சிறுநீரக வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை
01 Mar,2023
கருத்தரிக்கும் பெண்மணிகளில் பலருக்கும் சிறுநீரகம் தொடர்பான தற்காலிக பாதிப்புகள் ஏற்படக்கூடும். கருத்தரித்திருக்கும் காலகட்டங்களில் பெண்மணிகளின் உடலில் ரத்த ஓட்டம் இயல்பான அளவைவிட கூடுதலாக பயணிப்பதால், வெளியேறும் சிறுநீரின் அளவும், சிறுநீரகங்களில் பணியும்.. கூடுதலாக இருக்கும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் சிறுநீரக வீக்க பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு வலது பக்க சிறுநீரகமும், சிலருக்கு இடது பக்க சிறுநீரகமும், வெகு சிலருக்கு மட்டும் இரண்டு சிறுநீரகங்களிலும் வீக்க பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் போது பெண்மணிகளுக்கு பிரத்யேக ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பினை மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கண்டறிவார்கள். வேறு சில பெண்மணிகளுக்கு பிரசவித்த பிறகு, குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதன் அறிகுறி சிலருக்கு வெளிப்படுவதில்லை.
பக்கவாட்டிலும், முதுகிலும் உண்டாகும் வலி, அடி வயிறு மற்றும் இடுப்பு பகுதி முழுவதும் பரவினாலோ... சிறுநீர் கழிக்கும்போது வலியோ அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ இத்தகைய பாதிப்பு உண்டாகி இருக்கிறது என அவதானிக்கலாம். மேலும் வேறு சிலருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல் ஆகியவற்றுடன் சிறுநீரகம் தொடர்பான வேறு சில பிரச்சனைகளும் உண்டாகலாம்.
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் குழாய் எனப்படும் பிரத்யேக குழாய் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அது சிறுநீரை வெளியேற்றும் குழாய் மூலம் வெளியேறுகிறது. இது ஒரு வழிப்பாதையாக மட்டுமே இயங்குகிறது. இதன் போது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் ஆகிய பகுதிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டாலோ.. அந்தப் பகுதியில் உள்ள நரம்புகளில் பலவீனம் அடைந்தாலோ.. அல்லது வேறு சில காரணங்களாலோ இத்தகைய பாதிப்பு உண்டாகும். சிலருக்கு சிறுநீர் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் காரணமாக சிறுநீர் வெளியேறாமல் உட்புறமாக பயணித்து, சிறுநீரகத்தின் மேல் பகுதிக்கு சென்று விடும். இதன் காரணமாகவும் சிறுநீரக வீக்க பாதிப்பு ஏற்படக்கூடும்.
பாதிப்பு மற்றும் வலியின் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை பிரத்யேக எக்ஸ்ரே பரிசோதனை, மிகச் சிலருக்கு MAG3 எனப்படும் ஸ்கேன் பரிசோதனை ஆகியவை பரிந்துரைக்கப்படலாம்.
பரிசோதனைகளில் கிடைத்த முடிவுகளின் படி பாதிப்பின் தன்மையை பொறுத்து மருத்துவ நிபுணர்கள் நிவாரண சிகிச்சையை அளிக்கிறார்கள். சிலருக்கு பாதிப்பு வீரியமாக இருந்தால், அவர்களுக்கு சத்திர சிகிச்சை மூலமாக நிவாரணம் வழங்குகிறார்கள்.