பட்டெல்லா டிஸ்லொகேசன் எனும் முழங்கால் மூட்டு பாதிப்பு
08 Jan,2023
விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எதிர்பாராத தருணத்தில் நடைபெறும் விபத்துகளால் முழங்கால் மூட்டு பகுதிகளிலுள்ள பட்டெல்லா எனப்படும் எலும்பு பகுதி பாதிக்கப்படுகிறது. பல தருணங்களில் தானாகவே குணமாக கூடிய இந்த பாதிப்பு, சிலருக்கு கடுமையான வலியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கான சிகிச்சை குறித்து விளக்கமளிக்கிறார் இத்துறை நிபுணரான டொக்டர் பாலசுப்ரமணியன்.
எம்முடைய முழங்கால் மூட்டு பகுதி, தொடை எலும்பு, ஷின் போன் எனப்படும் மற்றொரு எலும்பு பகுதி மற்றும் பட்டெல்லா எலும்பு பகுதி என மூன்று எலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளின் போது பட்டெல்லா எலும்பு இடமாற்றம் ஏற்பட்டு, வலியை ஏற்படுத்துகிறது. கடுமையான வலி, திடீர் வீக்கம், நடக்க இயலாத சூழல், முழங்கால் பகுதியின் அமைப்பில் மாற்றம் ...போன்ற அறிகுறிகள் இருந்தால், அவை பட்டெல்லா டிஸ்லொகேஷன் எனப்படும் பாதிப்பிற்குரிய அறிகுறியா..! என்பதனை மருத்துவரிடம் ஆலோசித்து உரிய பரிசோதனைகளும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய திகதியில் நாட்டியமாடும் பெண்களும், விளையாட்டுத்துறையில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகளும், வேறு சில அரிய பாதிப்புகளாலும் கூட இத்தகைய வலி ஏற்படக்கூடும். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் பாதிப்பினை துல்லியமாக அவதானித்த பிறகு, இதற்கான நிவாரண சிகிச்சையை வழங்குவர். சிலருக்கு இயன்முறை பயிற்சியையும் வழங்கி நிவாரணம் அளிப்பர். இதனை உரிய முறையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.