முப்பது வயதைக் கடந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் தம் வாழ்வில் ஒரு முறையாவது நடு முதுகு வலியால் அவதிப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு இன்று நடு முதுகு வலி அதிகரித்திருக்கிறது. ‘அதென்ன நடு முதுகு வலி?’ எனக் கேட்கலாம். முதுகு வலியும் அல்லாது கழுத்து வலியும் அல்லாது நடு முதுகில் வருகின்ற வலி. இதற்கான காரணங்கள் என்ன, தீர்வுகள் என்ன, வராமல் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
முதுகுத் தண்டுவட அமைப்பு...
மூளையின் அடியிலிருந்து முதுகுத்தண்டுவடம் நம் இடுப்பு வரை செல்லும். இதனை பாதுகாக்க சிறுசிறு எலும்புகளாய் முதுகுத்தண்டு எலும்புகள் கழுத்து முதல் இடுப்பு வரை ஒன்றன் பின் ஒன்றாய் அமைந்திருக்கும். இதன் இடையிடையே ஜெல்லி போன்ற ‘தட்டுகள்’ அமைந்திருக்கும். தண்டுவடத்தில் இருந்து நரம்புகள், எலும்புகளில் உள்ள சிறு துவாரங்கள் வழியே வெளியே வந்து கை மற்றும் கால்களுக்குச் சென்று சமிக்கைகளை கடத்தும்.
கழுத்தில் உள்ள தண்டு வட எலும்புகளை கழுத்து எலும்புகள் என்பது போல நடுமுதுகு மற்றும் கீழ் முதுகு எலும்புகள் என மருத்துவத்தில் அழைப்பர். அதேமாதிரி, சிறிது முதல் பெரிது என நிறைய தசைகள் தண்டுவடத்தைச் சுற்றி அமைந்திருக்கிறது.
அறிகுறிகள்...
*மூச்சு விடும்போது வலிப்பது.
*நீண்டநேரம் கைகளினால் செய்ய வேண்டிய வேலைகளில் (உதாரணமாக, தையல் பணி, காய் நறுக்குவது) வலி தோன்றுவது.
*வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது கைகளுக்கும் கழுத்துக்கும் சம்பந்தப்பட்ட வேலைகளில் வலி தோன்றும்.
காரணங்கள்...
*நடு முதுகில் வலி வருவதற்கு 99 சதவிகிதம் எலும்பு மூட்டுப் பிரச்சினை இல்லை. ஆனால் அதனை சுற்றியுள்ள தசைகளே அதற்கு காரணம்.
*கழுத்து, நடு முதுகு, இடுப்பு என மூன்று பகுதி தசைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே நாம் கைகளுக்கு, கழுத்துக்கு நிறைய வேலைகள் தரும்போது நடு முதுகு தசைகள் பாதிக்கப்படும்.
*இதனை கவனிக்காமல் விட்டால் அடுத்து கழுத்து வலி, இடுப்பு வலி, கால் மூட்டு வலி என ஒன்றன்பின் ஒன்றாக தசைகள் பாதிப்படையும். மேலும் இது வருடப் போக்கில், கழுத்து மற்றும் இடுப்பு எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கண்டறிய...
*நடு முதுகில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு வலி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.
*அவர் முழுவதும் தசை பரிசோதனைகள் செய்து, எந்தெந்த தசைகள் பலவீனமாகவும், இறுக்கமாகவும் (Tightness) இருக்கிறது என கண்டறிவர்.
*எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இயன்முறை மருத்துவம்...
*முதலில் வலியை குறைக்க இயன்முறை மருத்துவ உபகரணங்கள், சில பயிற்சிகள், சில தசை நுணுக்கங்களை (Muscle Manual techniques) பயன்படுத்துவோம். இதில் முற்றிலுமாய் வலி குணமாகிவிடும்.
*மேலும், வலி வராமல் இருக்கவும் சில உடற்பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்போம்.
*தசைகளை பலப்படுத்த, இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்த என உடற்பயிற்சிகள் இருக்கும்.
*இதனை தொடர்ந்து செய்து வந்தால் வலி மீண்டும் வராது.
வராமல் தடுக்க...
*ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளவர்கள், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடங்களாவது நடக்க வேண்டும்.
*கைகள் மற்றும் கழுத்திற்கு தொடர்ந்து வேலை தரும் தொழிலில் இருப்பவராக இருந்தால், வலி இல்லை எனினும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, வலி வராமல் தடுக்க உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
*உடற்பயிற்சி கூடம் (ஜிம்) செல்பவர்கள் தங்கள் கூடத்தில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி பயன் பெறலாம்.
*நம் உடல் தோரணையில் (Posture) ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை இயன்முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, அதற்கு தக்கவாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கூன் இருப்பது, கழுத்தை முன் நோக்கி வைத்திருப்பது, இடுப்பு உள்ளடக்கி இல்லாமல் முன்னோக்கி வைத்திருப்பது போன்றவை Bad Postures எனப்படும்.
*எட்டு மணி நேரம் வேலை செய்கிறோம் எனில் எட்டு மணி நேரமும் நேராக நிமிர்ந்தே அமர்ந்திருக்க முடியாது என்பதால், பத்து நிமிடம் நேராக உட்கார்ந்து வேலை செய்தால் ஐந்து நிமிடம் சாய்ந்து அமரலாம். எனவே முழுநேரமும் கூன் போட்டு உட்காருவதை தவிர்க்கலாம்.
மொத்தத்தில் உடலில் எங்கு வலி வந்தாலும் ‘இது சாதாரண வலியாகத்தான் இருக்கும்’ என அலட்சியப்படுத்தாமல், தகுந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலே போதும், பல பிரச்சினைகளை, பக்கவிளைவுகளை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்துகொண்டு நம் வேலையை இன்னும் உற்சாகமாய் தொடங்கலாம்.