இன்றைய திகதியில் மாதவிடாய் சுழற்சி என்பது 13 வயதிலேயே பெண்களிடத்தில் ஏற்படுகிறது. அதே தருணத்தில் மூன்று பெண்களில் ஒருவருக்கு மாதவிடாய் சுழற்சியில் சீரற்றத் தன்மை ஏற்பட்டு, பிசிஓஎஸ், பிசிஓடி போன்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.
இவர்களைத் தவிர பொதுவாக 45 வயது முதல் 55 வயதில் வரையிலான பெண்மணிகளுக்கு மாதவிடாய் சுழற்சி சமசீரற்ற தன்மை இயல்பாகவே நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உதிரப்போக்கு ஏற்படுகிறது.
இதனை பெரும்பாலான பெண்மணிகள் தங்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கான காலகட்டம் என உணர்ந்து கொள்கிறார்கள்.
மேலும் இதன்போது அவர்களின் உடலில் ஹோர்மோன் சுரப்பிகளின் இயங்கு திறனில் சமநிலை பாதிக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு பாதிப்பு, உயர் குருதி அழுத்த பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்களும், வளர்ச்சிதை மாற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதன் காரணமாகவே மகப்பேறியியல் மருத்துவர்கள் இந்த வயதுள்ள பெண்மணிகளுக்கு மாதவிடாய் நின்ற பிறகான உதிரப்போக்கு ஏற்பட்டால், அதற்கு உடனடியாகவும், முறையாகவும் சிகிச்சை பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கு இயல்பாக நடைபெற வேண்டிய மாதவிடாய் சுழற்சி, இயல்பாக நடைபெறாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று, அதனுடன் உதிரப்போக்கும் இருந்தால்.. இவர்கள் மாதவிடாய் நின்ற பிறகான உதிரப்போக்கு என்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என பொருள் கொள்ளலாம்.
இதற்கு எண்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையகத்தில் சதை வளர்ச்சி, அடினோமைசிஸ் எனப்படும் கருப்பை வீக்கம், ஃபைப்ராய்ட்ஸ் எனப்படும் நீர் கட்டிகள், தீங்கிழைக்காத கட்டிகள், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டிகள், வலி நிவாரணிக்காக தொடர்ச்சியாக ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால் அதன் பக்க விளைவு மற்றும் எண்டோமேட்ரியல் ஹைபர்பிளேஸியா ஆகியவற்றின் காரணமாக மாதவிடாய் நின்ற பிறகான உதிரப்போக்கு ஏற்படக்கூடும்.
மாதவிடாய் நின்ற பிறகு உதிரப்போக்கு ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலமாகவும், மருந்து, மாத்திரைகள் மூலமாகவும் இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதனை தொடக்க நிலையில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், நாளடைவில் கர்ப்பப்பை புற்றுநோய், கருப்பையக புற்றுநோய் என உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாரிய பாதிப்புகள் உண்டாகக்கூடும்.
எனவே மாதவிடாய் நின்ற பெண்மணிகள் தங்களது நாளாந்த நடவடிக்கையில் உடற்பயிற்சியினை இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உடல் எடையை சீராக பேண வேண்டும். வாழ்க்கை நடைமுறை மாற்றத்தில் உணவு முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.