மனித உடலில் நகம், முடி தவிர்த்து எல்லா உறுப்புக்களிலும் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் நம்மால் தவிர்க்கக் கூடிய புற்றுநோய் என்றால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான்.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதற்கு தடுப்பூசி உள்ளது.
பெண்கள் பருவ வயதை அடையும் போதும், கருத்தரிக்கும் போதும் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்படலாம். ஆரம்ப நிலை புற்றுநோய் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாது.
கொஞ்சம் பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம். மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம்.
பொதுவாக நம்முடைய உடலில் செல்கள் தோன்றி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதியில் செல்கள் உற்பத்தியாகும். ஆனால் அவை மறைவது இல்லை. இதனால் மிக அதிக அளவில் செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நாளடைவில் இந்த செல்கள் உருவாக்கம் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்கிறோம்.
இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறியலாம்.
பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, புகைப்பழக்கம், போதை பழக்கம் ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க முடியும். மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும்.
மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.