முதியவர்களை தாக்கும் இரத்த புற்றுநோய் .
12 Dec,2022
இன்றைய திகதியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மல்டிபிள் மைலோமா எனப்படும் ஒரு வகையினதான ரத்த புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எம்முடைய எலும்பு மஜ்ஜை எனும் பகுதியில் உருவாகும் புற்று நோய் தான் மல்டிபிள் மைலோமா எனப்படும் ரத்த புற்றுநோய்.
எம்முடைய எலும்பு மஜ்ஜையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் பிளாஸ்மா செல்களின் எண்ணிக்கை, வரையறுக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக குவிவதன் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
இதனுடைய எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆரோக்கியமான ரத்த அணுக்களின் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
எலும்பு வலி, எலும்புகள் பலவீனம் அடைவதால் அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவு, இரத்த சோகை, அதிகளவிலான நோய் தொற்று, அதிக தாகம், மலச்சிக்கல், நாளாந்த நடவடிக்கைகளை கூட சுறுசுறுப்பாக மேற்கொள்ள இயலாமல் சோர்வாக இருப்பது, சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும், இயங்குத்தன்மையிலும் சமச்சீரற்ற தன்மை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன், திசு பரிசோதனை, எலும்பு மஜ்ஜை பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவர். இதற்கு கீமோதெரபி எனும் சிகிச்சையை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
சிலருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பில் வேறு வகையினதான கிரானிக் லிம்போசைட் லுகேமியா எனும் பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவர்கள் வேறு வகையான பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கி நிவாரணம் அளிப்பர்.