ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எப்படி.?
05 Dec,2022
எம்மில் பலரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது நல விசாரணையை தொடர்ந்து கேட்கும் பிரதான கேள்வி. உங்களுக்கு சர்க்கரை இருக்கா? எவ்வளவு இருக்கு? இதை தவறாமல் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மருத்துவர்கள் மாத்திரைகளை சாப்பிடச் சொல்லி வலியுறுத்தினாலும், உணவு பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்வதில்லை. உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாத வரை..., எம்முடைய இரத்த சர்க்கரையின் அளவில் மாற்றங்கள் ஏற்படாது. இதனால் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுவாக இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினாலும், மாலை வேளைகளில் அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் தேத்தண்ணி எனப்படும் தேநீருடன், நொறுக்குத் தீனியை சாப்பிடுகிறோம். இதனை தவிர்க்க இயலாது.
இந்த நொறுக்கு தீனி தான் நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதில் முதன்மையான தடைக்கல்லாக இருக்கிறது. இதனையடுத்து இரவில் உறங்குவதற்கு முன் சாதத்தை பசியாறுவது. இதன் காரணமாகவும் காலையில் எழுந்தவுடன் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.மேலும் வேறு சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படாதிருப்பதற்காக உறங்கும் முன் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். இந்த வாழைப்பழமும் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இந்த மூன்று விடயங்கள் தான் பாரிய இடையூறாக இருக்கிறது என உணவில் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். அதே தருணத்தில் மாலை வேளைகளில் நாம் அருந்தும் நொறுக்குத் தீனிகளில் சிப்ஸ், பப்ஸ், பஜ்ஜி, போண்டா, பாண் ஆகியவற்றுக்கு பதிலாக, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி.. போன்ற நட்ஸ்களை சாப்பிடலாம். அதேபோல் இரவில் அரிசி சாதத்தை முற்றாக தவிர்த்து, அதற்கு பதிலாக வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த உணவு முறையை உறுதியாக பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் இத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால்..., ஆயுள் முழுவதும் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் எடுத்துரைக்கிறார்கள்.