வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானோருக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நோயாளிகளிடையே இந்த குறைபாட்டை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் பல சமயங்களில் மருத்துவர்களே தவறிவிடுகின்றனர். அன்றாட உணவில் வைட்டமின் பி12-ஐ நமக்கு வழங்கும் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். ஆனால், தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு மட்டுமே வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இது மிகவும் குறைவானதே. ஆனால், இந்த அளவு குறைந்தாலும் நமக்கு பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
வைட்டமின் பி 12 குறைபாட்டின் முக்கிய அறிகுறி அதிகப்படியான சோர்வு. இதனால், நம் அன்றாட செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கும்.
பல்வேறு நரம்பியல் பிரச்னைகள், குழப்பம், உணர்வின்மை, ஞாபக மறதி, சமநிலையை கடைபிடிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். விட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்யாவிட்டால் இந்த பிரச்னைகள் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த பிரச்னைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வைட்டமின் பி12 குறைபாடும் இதற்கு ஓர் காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டறிய தவறுகின்றனர்.
மேலும், ஆரோக்கியமான உணவு முறையை கொண்டிருப்பது விட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தாது என நினைத்துக்கொள்கிறோம்.
வைட்டமின் பி12-ஐ உடல் எப்படி உறிஞ்சுகிறது?
தாவர அடிப்படையிலான உணவுமுறையை பின்பற்றுபவர்கள் மற்ற வைட்டமின்களின் தேவையை எப்படி மாத்திரை மூலம் பூர்த்திசெய்கின்றனரோ, அதேபோன்று பி12 மாத்திரைகளையும் எடுக்கவேண்டும்.
வைட்டமின் பி12ஐ உடல் உறிஞ்சும் செயல்பாடு சிக்கலான, பல படிநிலைகளை கொண்டது. அந்த செயல்பாடு, வாயில் தொடங்கி, சிறுகுடலில் முடிகின்றது. உணவை உண்ணும்போது உணவில் நமது உமிழ்நீர் கலக்கிறது. உணவை விழுங்கும்போது நமது வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் பி12 அழியாமல் காப்பதற்காக, நமது உமிழ்நீரில் உள்ள ஆர் புரோட்டீன் எனப்படும் புரதமும் உணவுடன் சேர்ந்து வயிற்றில் கலக்கிறது.
வயிற்றுச்சுவரில் உள்ள பரைட்டல் செல்கள் (parietal cells) பி12ஐ உறிஞ்சுவதற்கான இரு நொதிகளை சுரக்கிறது. ஒன்று வயிற்று அமிலம் - இது உணவு மற்றும் வைட்டமின் பி12ஐ தனியாக பிரித்து, எச்சிலில் உள்ள ஆர் புரோட்டீனுடன் வைட்டமினை கலக்க உதவுகிறது. மற்றொன்று வைட்டமின் பி12ஐ உடல் உறிஞ்சுவதற்கு பயன்படும் இன்ட்ரின்சிக் ஃபேக்டர் எனப்படும் ஒரு புரதம். இது, வயிற்றில் கலந்து டியோடெனம் எனப்படும் சிறுகுடல் பகுதிக்கு செல்கிறது.
டியோடெனத்தில் உள்ள கணைய சுரப்பிகள் ஆர் புரோட்டீனிலிருந்து B12ஐ விடுவித்து இன்ட்ரின்சிக் ஃபேக்டருக்கு அனுப்புகின்றது. இந்த இணைத்தல், B12 உயிரணுக்களில் உறிஞ்சப்படுவதற்கு அனுமதிக்கிறது, அங்கு அது நரம்பு செல்களை பராமரிக்கவும் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
இந்த பலநிலை செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது.
பி12 குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
உமிழ்நீர் இல்லாவிடில், வைட்டமின் பி12 உமிழ்நீரில் உள்ள ஆர் புரோட்டீனுடன் இணையாது. இதனால் பி12ஐ உறிஞ்சும் உடலின் திறன் தடைபடுகிறது. நமது வாய்ப்பகுதிக்கு வறட்சியை ஏற்படுத்தும் பல்வேறு மருந்துகள் காரணமாக, உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. அவற்றில் ஓபியாய்டுகள், உள்ளிழுக்கும் மருந்துகள், டிகோங்கஸ்டெண்டுகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ரத்த அழுத்த மருந்துகள் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Xanax போன்ற பென்சோடியாசெபைன்கள் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் பி12 குறைபாட்டுக்கு வயிற்றில் குறைவான அளவு அமிலம் சுரப்பதும் காரணமாகிறது. அல்சருக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகள் அல்சரை ஏற்படுத்தும் வயிற்று அமிலங்கள் சுரப்பை குறைக்கிறது. இந்த மாத்திரைகளுக்கும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வயது முதிர்வும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை குறைக்கிறது.
வயிற்றில் உள்ள சிறப்பு பாரிட்டல் செல்கள் மூலம் இரைப்பை அமிலம் மற்றும் இன்ட்ரின்சிக் ஃபேக்டர் உற்பத்தி B12ஐ உடல் உறிஞ்சுவதற்கு முக்கியமானது. ஆனால், வயிற்றுச்சுவரில் ஏற்படும் சிதைவும் இரண்டின் உற்பத்தியையும் பாதிக்கலாம்.
இரைப்பை அறுவை சிகிச்சை, நாள்பட்ட அழற்சி அல்லது தீங்கு விளைவிக்கும் ரத்த சோகை, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளால் வயிற்றுச்சுவர் சிதைவடைகிறது.
கணையம் முறையாக செயல்படாததும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கு பொதுவான காரணமாகும்.
டைப் 2 நீரிழிவு நோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் மெட்ஃபார்மின் மாத்திரைகளும் பி12 குறைபாட்டை உண்டாக்குகிறது