தலை முதல் கால் வரை போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கினால் இதுதான் நடக்கும்.!
20 Nov,2022
குளிர்காலங்களில் போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு படுத்தால் தான் பலருக்கும் தூக்கமே வரும். ஆனால் அப்படி தூங்குவது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கெட்டியான துணிகளை அணிந்துக்கொண்டும் மற்றும் குளிர் காற்று உடலில் படராமல் இருப்பதற்கான பாதுகாப்புகளை செய்துகொண்டும் தான் வெளியில் வர முடிகிறது. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளிலேயே நிலைமை இப்படி தான் என்றால், குளிர்ந்த பிரதேசங்களின் நிலைமையே வேறு.
எனினும் குளிர்காலம் வந்துவிட்டாலே, இரவு தூங்கும் போது அழுத்தமாக தலை முதல் காலை வரை போர்த்திக் கொண்டு தான் நம்மில் பலரும் உறங்கச் செல்வோம். உடல் முழுவதுமாக மூடப்பட்டுவிடுவதால் கால்களும் முகமும் தெரியாமல் போய்விடுகிறது. இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. இப்படி தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.
குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால், ஒரு இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாக போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. போர்வையால் வாய் மற்றும் மூக்கை மூடினால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முழு உடலையும் போர்வையால் மூடுவது ஆக்ஸிஜனின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் இருதய பாதிப்புகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகிறது.
மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பது என்பது ஆரோக்கியத்தின் தலையாய பணியாகும். ஆனால் போர்வை முழுவதுமாக இடைவெளியின்றி மூடிக்கொண்டால் சுவாசிப்பது கடினமாகிவிடும். இதனால் இரவில் சரியாக தூங்க முடியாத நிலையை உருவாக்கும். இதுதொடரும் பட்சத்தில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். தலைவலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தூக்கமின்மையால் மனநலம் முற்றிலும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
உடலுக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறைந்தால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு வேகமாக சேரும். அதையடுத்து உடல் எடை அதிகரித்து, சில நாட்களில் உடல் பருமனாகிவிடும். அதை தொடர்ந்து மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் குளிர் என்றாலும், உடலை முழுவதுமாக போர்வையால் போர்த்திக்கொள்ளாதீர்கள். அவ்வப்போது சற்று உடலை விட்டு போர்வையை விலக்கி எடுத்து உறங்க பழகுங்கள்.