மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய மக்களிடையே மனநலம் குறித்த அக்கறை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
உலக அளவில் 18 வயதுக்கு மெற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது.
ஒருவர் தனக்குள்ள உளவியல் பிரச்னைகள் பற்றி பொதுவெளியில் பேசத் தயங்கும் போக்கே இருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. மக்கள் தங்கள் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், மனநலம் என்றால் என்ன, என்ன மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மனநல மருத்துவரை நாடவேண்டும் என்பன போன்ற அம்சங்களில் பலருக்கும் கேள்விகள் உள்ளன.
மனநலம் என்பது நம் உடல் நலத்தின் பிரிக்க முடியாத பகுதி. மனநலம்தான் தனிநபர் நல்வாழ்வு, பயனுள்ள, திறன்மிக்க தனிநபர் செயல்பாட்டிற்கான அடித்தளம். மன நலக் கோளாறுகளைத் தடுப்பது, சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு ஆகிய அனைத்தும் மன நலத்தில் அடங்கும்.
மனச்சோர்வு, பதற்றம், பசியின்மை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற மிகவும் பொதுவான மனநலக் கோளாறுகளே கூட, உதவி நாடாமல் தவிர்க்கப்படுவதால் புறக்கணிக்கப்படுகின்றன. மனநலத்தைப் பொறுத்தவரை அதை கவனிக்காமல் விட்டால், பின்னாளில் பாதிக்கப்பட்ட தனிநபருக்கும் சரி, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சரி சிக்கல்களைக் கொண்டு வரலாம்.
அத்தகைய சில அடிப்படையான, ஆனால் மருத்துவ கவனம் தேவைப்படக்கூடிய சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளை இங்கு பார்ப்போம்.
வேலையின் மீது ஆர்வமின்மை
வேலையில் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென வேலையின் மீது ஆர்வமின்றி இருப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்புடையதாக இருக்காது. அப்படியிருக்கும்போது, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
அதேபோல், "ஓர் ஆணாக இருந்தால், தனிபட்ட வாழ்விலும் மிக ஆர்வமாகச் செய்துகொண்டிருந்த விஷயங்களை எல்லாம் கைவிடுவது மற்றும் ஒரு பெண்ணாக இருந்தால், அன்றாடப் பணிகள் எதன் மீதும் கவனமில்லாமல் இருப்பது என்று இருந்தால் கவனிக்க வேண்டும்," என்றவர் சுய சுகாதாரத்தில் அக்கறையின்றி இருந்தால், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உதவியை நாட வேண்டும் என்கிறார்.
பேச்சில் மாற்றங்கள்
மனச்சிதைவு நோய் இருந்தால் பேச்சு வித்தியாசமாக இருக்கலாம், எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. பணியை விடுவதற்கு, உடன் பணியாற்றுபவர்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைப் போன்ற வித்தியாசமான காரணங்களைக் கூறுவார்கள்.
"தங்களுடைய பொருட்களை தங்களுக்குப் பிறகு யாருக்குக் கொடுப்பது, தனக்குப் பிறகு யார் என்பதைப் போன்ற விஷயங்களைப் பேசுவது, தற்கொலை எண்ணங்கள் இருப்பதற்கான அறிகுறி. இவையெல்லாம் எச்சரிக்கை அறிகுறிகள். அப்படியான பேச்சுகள் இருக்கும் சூழலில் கட்டாயம் கவனிக்க வேண்டும், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்," என்று கூறுகிறார் பூர்ண சந்திரிகா.
வயதானவர்களுக்கு கவனமின்மை, ஞாபக மறதி போன்றவை இருந்தால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரை, பிரசவத்திற்குப் பிறகான மனச் சோர்வு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இத்தகைய மனச்சோர்வு இயல்பாகவே பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்டு சில வாரங்களில் குணமடைந்து விடும்.
ஆனால், இன்றைய சூழலில் சிலருக்கு அதுவே நீண்டகாலம் நீடிக்கும்போது குழந்தைக்கே அபாயமாகக்கூட அது மாறலாம் என்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. "குழந்தையையே கொன்றுவிட்ட நோயாளிகளைக் கூட நான் பார்த்துள்ளேன்.
தான் இல்லையென்றால் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது, தன்னையே கவனித்துக்கொள்ள முடியவில்லையே எப்படி குழந்தையைக் கவனிப்பது என்பன போன்ற அதீத சிந்தனைகளால் ஏற்படும் மனச்சோர்வு காரணமாக குழந்தையையே கொல்வதும் கூட நடக்கிறது.
எதிலுமே நாட்டமின்றி இருப்பது, உடல் எடை அபரிமிதமாகக் குறைவது, தூக்கமின்மை, கவலை போன்றவற்றோடு இந்த மாதிரியான சிந்தனைகளும் வரும். இத்தகைய அறிகுறிகள் தெரியும்போதே மனநல சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் சந்திரிகா.
உடல் பருமன் அதிகரிப்பது என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. அது நம்முடைய வாழ்வுமுறை மாறியதால் நிகழ்கிறது. ஆனால், உடல் எடை மிகவும் குறைவது மனநல ரீதியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை என்கிறார் பூர்ண சந்திரிகா.
"உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருப்பதால் இரண்டு வகையான மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று, அதிகமான உணவை நன்கு சாப்பிட்டுவிட்டு பிறகு அவையனைத்தையும் வாந்தி எடுத்துவிடுவது, அல்லது உடனேயே மிகக் கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றால் கரைத்துவிட முயல்வது. மற்றொன்று, எடை கூடிவிடக் கூடாது என்பதற்காக சாப்பிடாமலேயே இருப்பது.
இவர்கள் உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனத்தோடு இருப்பார்கள். முதல் பிரச்னையால் அவதிப்படுவோர் நிறைய சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு, எடை கூடிவிடக் கூடாது என்பதற்காக சாப்பிட்டதை அப்படியே வாந்தியெடுத்து விடுவார்கள்.
இது புலிமியா, பிஞ்ச் ஈட்டிங் குறைபாடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல், சாப்பிடாமலேயே இருக்கும் பிரச்னையால் அவதிப்படுவோர், எப்போதும் மிகவும் ஒல்லியாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகத் தீவிரமாகச் சாப்பிடாமலேயே இருப்பார்கள். இது அனொரெக்சியா நெர்வோசா என்றழைக்கப்படுகிறது.
இப்படி மிகத் தீவிரமாகச் சாப்பிடாமல் இருப்பதும் அதீதமாகச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு அதனால் எடை கூடாமல் இருக்க மோசமான வகையில் முயலும் பழக்கமும் யாருக்கேனும் இருந்தால், அவர்கள் மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டியது அவசியம்," என்று கூறுகிறார்.
தெனாலியை போல் சின்ன விஷயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும் பயத்தோடுமே அணுகினால் நிச்சயம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எந்த வேலையையும் படபடப்புடனேயே செய்வது, செய்ய வேண்டிய வேலையை நினைத்து, நடக்க வேண்டியதை நினைத்து அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பிருந்தே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாவது, சிறு விஷயமாகவே இருந்தாலும் அதிர்ந்துவிடுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட விஷயங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும். சான்றாக, சிலர் சாவு மேளத்தைக் கேட்டால் பயந்து அலறிவிடுவார்கள், பல்லியைப் பார்த்தாலே ஊரையே கூப்பிடுமளவுக்கு அலறுவார்கள். அவர்களுக்கு அந்த பயத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
இத்தகைய அச்சங்கள் இருக்கும்போது அதனால் பேனிக் அட்டாக் ஏற்படலாம். அது ஏற்படும்போது, மூச்சுவிட முடியாது, இறந்துவிடுவோமோ என்ற அளவுக்கு அச்சம் அதிகமாக இருக்கும், தொண்டை வறண்டுவிடும். கூட்டத்தில் இருப்பது பிடிக்காது, இருட்டு அறையில் இருந்தால் பிடிக்காது.
"இத்தகைய பிரச்னைகளுக்கு மருந்தியல் சிகிச்சை, உளவியல் சிகிச்சை இரண்டுமே வழங்கப்படும். இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடனும் சிகிச்சையளிக்கப்படுகிது. அதுபோக, அச்சத்தைப் போக்குவதற்கு மருந்தியல் சிகிச்சையளிப்பதோடு சேர்த்து, அச்சத்தின் அடிப்படைக்கான உளவியல் சிகிச்சையும் வழங்கப்படும்.
சான்றாக, ஒருவர் சிலந்தியைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறார் என்றால் அவருக்கு தொடக்கத்தில் சிலந்தி குறித்த விவரங்களை சிறிது சிறிதாகக் கற்றுத் தந்து, அதன் படத்தைக் காட்டி, பிறகு படத்தைத் தொட்டுப் பார்க்கச் சொல்லி, இப்படியாக மெல்ல மெல்ல பயத்தைப் போக்குவதற்கான சிகிச்சை வழங்கப்படும்.
அதோடு, ஒரு சின்ன விஷயத்திற்கு ஏன் இவ்வளவு அச்சம் ஏற்படுகிறது? அந்த அச்சத்தின் அடிப்படை எங்கிருந்து தொடங்கியது? ஆகியவற்றை ஆராய்ந்தும் சிகிச்சை அளிக்கப்படும்," என்கிறார்.
பிரமை ஏற்படுதல்
இருவர் பார்க்கும் ஒரே செயலில், ஒருவர் மட்டும் அது தன்னைக் குறி வைத்து செய்வதைப் போல நினைத்துக் கொள்வதைத்தான் பிரமை என்கிறார் பூர்ண சந்திரிகா
சிவப்புக் கோடு
"சான்றாக, இருவர் இருக்கிறார்கள். எதேச்சையாக அதில் ஒருவர் தனது எச்சிலைத் துப்புகிறார். அப்போது மற்றொருவர், 'அவன் என்னைப் பார்த்து, என்னைக் கேவலப்படுத்தவே துப்புகிறான்' என்று தனக்குத் தானே ஓர் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் இது.
எதேச்சையாக நடக்கும் விஷயம் கூட, தன்னைக் குறி வைத்தே நடப்பதைப் போல் நினைத்துக் கொள்வது. உறவுகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் அதீத சந்தேகம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்தால் இது அதிகமாகிறது," என்று கூறினார்.
உணர்ச்சிக் கொந்தளிப்பு
சிலர் திடீரென கோபப்பட்டு கத்துவார்கள், கண்ணீர் விட்டு அழுவார்கள். தீவிர மன உளைச்சல், கோபம் போன்ற இயல்புக்கு மாறான மனநிலைக்கு ஆளாவார்கள். இப்படி இயல்பான மனநிலையில் இருந்து திடீரென வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவது மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
"சாலைகளில் பொறுமையின்மை காரணமாக ஏற்படும் உணர்ச்சி ரீதியிலான சண்டைகளை பல இடங்களில் பார்க்கிறோம். அத்தகைய பிரச்னைகளைக் கையாள வெளிநாடுகளில், சின மேலாண்மை வகுப்புகளில் பங்கெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.
இத்தகைய மோதலில் யாரேனும் சிக்கினால், அவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சின மேலாண்மை வகுப்புகளில் கலந்துகொண்டால் மட்டுமே கார் ஓட்ட முடியும் என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. அத்தகைய முயற்சிகளை இங்கேயும் கொண்டுவரலாம்," என்கிறார் மருத்துவர் சந்திரிகா.
"தன்னையோ மற்றவர்களையோ பாதிக்கக்கூடிய எந்த மாற்றத்தையும் நிச்சயம் கவனிக்க வேண்டும். குடும்பத்தில், உறவுகளில் எல்லாவற்றுக்கும் கத்துவது, நான் செத்துப் போய்விடுவேன் என்று மிரட்டுவது, தன்னையே காயப்படுத்திக் கொள்வது போன்றவற்றைச் செய்தால் நிச்சயமாக அதுவொரு பிரச்னைதான். மேலும், ஒரு சின்ன விஷயத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மனதளவில் பலவீனமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் மனநல மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்," என்று கூறினார்.
"மனநலமும் உடல்நலத்தைப் போலவே முக்கியமானதுதான். மனநல மருத்துவரை பார்க்கப் போவது என்றால் அதை வெளியில் சொல்லவே கூச்சப்பட்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், முன்பு அளவுக்கு இப்போது இல்லை. மனநலமும் முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மனநலத்திற்காக உதவி கேட்பது கோழைத்தனமான முடிவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போலவே, மனநல பிரச்னைகள் ஏற்படும்போதும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்," என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.