இந்தப் பாம்பின் நஞ்சு கொல்லாது என ஸ்மிட் நம்பியதாக சிக்காகோ டெய்லி ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.
1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவிலுள்ள லிங்கன் உயிரியல் பூங்காவின் இயக்குநர் அந்நகரின் இயற்கை வரலாற்றை அடையாளம் காண்பதற்கான கள அருங்காட்சியகத்திற்கு சிறிய பாம்பு ஒன்றை அனுப்பி வைத்தார்.
76 சென்டிமீட்டர் நீளமுடைய இந்த பாம்பு, அந்த அருங்காட்சியகத்தில் 33 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பிரபல பாம்பு நிபுணர் கார்ல் பாட்டர்சன் ஸ்மிட் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டது.
நிறமுடைய பாம்புகள் பற்றிய சிறப்பு நிபுணரான ஸ்மிட், 1955ம் ஆண்டு அருங்காட்சியகத்தின் விலங்கியல் தலைமை காப்பாளராக பணி ஓய்வு பெற்றபோது, உலகிலேயே பாம்பு மிக பெரிய ஊர்வனவியல் தொகுப்புகளை உருவாக்கியிருந்தார்.
பாம்புக் கடி
இந்த பாம்பின் தோல் மினுமினுத்தது. பூமஸ்லாங் என்றும் அறியப்பட்ட தென்னாப்பிரிக்க பச்சை நிற மரப்பாம்பு போல அதன் தலையின் வடிவம் இருந்தது என்று ஸ்மிட் எழுதி வைத்துள்ளார்.
ஆனால் அதனுடைய மலவாயில் (பொதுக்கழிவாய் திறப்பை மூடியிருப்பது) பிரிவு எதுவும் இல்லாமல் இருந்தது அவருக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியது.
அடுத்து ஸ்மிட் செய்ததுதான் அவருடைய உயிருக்கே உலை வைத்தது. மிகவும் அருகில் வைத்து சோதனை செய்ய அவர் அந்த பாம்பை தூக்கிப் பிடித்தார்.
ஸ்மிட்டை கொத்தி கொன்ற பாம்பு, தென் ஆப்பிரிக்க பச்சை நிற மரப்பாம்பு அல்லது பூம்ஸ்லாங் போன்ற பாம்பாகும்.
ஸ்மிட்டை கொத்தி கொன்ற பாம்பு, தென் ஆப்பிரிக்க பச்சை நிற மரப்பாம்பு அல்லது பூம்ஸ்லாங் போன்ற பாம்பாகும்.
ஸ்மிட் அந்த பாம்பை தூக்கிப் பிடித்தபோது, அது அவருடைய இடது பெருவிரலில் கடித்துவிட்டது. அந்த கைவிரலில் இரண்டு சிறிய ரத்த அடையாளங்கள் ஏற்பட்டிருந்தன.
உடனடியாக மருத்துவ உதவி பெறாமல், தன்னுடைய பெருவிரலில் இருந்து ரத்தத்தை ஸ்மிட் ஊறிஞ்சி எடுக்க தொடங்கினார்.
அவருடைய உடலில் பாம்பு கடித்த விஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை டைரியில் குறிப்பாக எழுத தொடங்கினார். 24 மணிநேரத்திற்குள் அவர் இறந்தார்.
ஸ்மிட்டின் கடைசி நாள்
மினுமினுக்கும் தோல் கொண்ட அந்த அரிய வகை பாம்புகள் மனிதரை கொல்லக்கூடிய அளவுக்கு விஷம் கொண்டதல்ல என்று சக பாம்பு நிபுணர்களில் பலர் நம்பியதைபோல ஸ்மிட்டும் நம்பியிருக்கலாம்.
எனவே, தனது இறப்புக்கு முன்னால் இருந்த நேரத்தில் வீட்டுக்கு சென்ற அவர், தனது உடலில் ஏறிய விஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பதிவு செய்ய தொடங்கினார்.
அமெரிக்க பொது வானொலியான பிஆர்ஐ-யின் "சையின்ஸ் ஃபிரைடே" நிகழ்ச்சி, ஸ்மிட்டின் டையிரியில் எழுதியிருந்த வார்த்தைகளை பயன்படுத்தி அவரது சொற்களாலேயே இறப்புக்கு முந்தைய கடைசி கடைசி தருணங்களை விவரித்து காணொளி ஒன்றை வெளியிட்டது.
சிகாகோவில் உலகிலேயெ மிகப்பெரிய ஊர்வனவியல் அருங்காட்சியகங்களில் ஒன்றை ஸ்மிட் உருவாக்கியுள்ளார்.
"ரயிலில் புறநகருக்கு பயணம் செய்தபோது மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வாந்தி இல்லாத வலுவான குமட்டல் ஏற்பட்டது."
"5.30 முதல் 6.30 மணி வரை 101.7 டிகிரி ஃபாரன்ஹீட் (38.7 டிகிரி செல்சியஸ்) காய்ச்சலை தொடர்ந்து கடுங்குளிரும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது."
"கிருமிகள் காரணமாக 5.30 மணியளவில் வாயில் இருந்து ரத்தம் வர தொடங்கியது. அந்த ரத்தம் பல் ஈறுகளில் இருந்து வந்திருக்கலாம். இரவு 8.30 மணிக்கு இரண்டு துண்டு பால் டோஸ்ட் சாப்பிட்டேன்."
"இரவு 9 முதல் நள்ளிரவு 12.20 மணி வரை நன்றாக தூங்கினேன். நள்ளிரவு 12.20க்கு சிறுநீர் கழித்தேன். சிறிய அளவில் ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறியது. அதிகாலை 4.30 மணிக்கு ஒரு குவளை தண்ணீர் குடித்தேன். அதை தொடர்ந்து வாந்தியோடு கடும் குமட்டலும் ஏற்பட்டது."
"இரவு உணவு செரிக்காமல் வெளிவந்தது. சற்று நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். காலை 6.30 மணி வரை தூங்கினேன்," என்று அவர் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவ உதவி மறுப்பு
ஸ்மிட் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால் மருத்துவ உதவி அளிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது. தான் உணர்ந்து வந்த அறிகுறிகளை இந்த சிகிச்சை மாற்றிவிடுவதை தவிர்ப்பதற்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
மாறாக, தனது ஆய்வு ஆர்வத்தால் உந்தப்பட்டு, காலை உணவுக்கு பின்னர் மிகவும் உன்னிப்பாக உணர்ந்து எழுதி வந்த குறிப்பை மீண்டும் எழுத தொடங்கியுள்ளார்.
1957ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி சிக்காகோ டெய்லி டிரிபுனலில் ஸ்மிட்டின் விநோதமான இறப்பு தலைப்பு செய்தியாக வெளியானது.
செப்டம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு உடலின் தட்பவெப்பநிலை 98.2 பாரன்ஹீட் (36.7 டிகிரி செல்சியஸ்). தானியங்கள் மற்றும் வேகவைத்த முட்டைகள், ஆப்பிள் சாஸ் மற்றும் காபியை காலை உணவாக சாப்பிட்டேன்.
சிறுநீர் வெளியாகவில்லை. ஒரு அவுன்ஸ் அளவுக்கு ரத்தம் ஒவ்வொரு 3 மணிநேரத்திலும் வெளியேறி கொண்டிருந்தது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிய தொடங்கியது. ஆனால் அதிக ரத்தம் வெளியேறவில்லை.
மதிய உணவுக்கு பிறகு 1.30 மணி அளவில், வாந்தி எடுத்த அவர் மனைவியை அழைத்தார். அவருக்கு உதவி செய்ய தொடங்கியபோது சுயநினைவிழந்தார். அவர் உடல் முழுவதும் வேர்வையால் நனைந்திருந்தது.
ஸ்மிட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, மருத்தவர் ஒருவர் அழைக்கப்பட்டு அவரது உடலின் இயக்கத்தை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
சுவாச மண்டலம் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நுரையீரலில் ரத்தம் கசிந்ததால் இந்த சுவாச பிரச்சனை ஏற்பட்டதை அவரது உடற்கூறாய்வு அறிக்கை வெளிப்படுத்தியது.
அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவால் அவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதிக விஷம்
ஸ்மிட் இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்திய அறிவியல் ஆய்வுகளில் பூம்ஸ்லாங், ஆப்பிரிக்க பாம்புகளில் அதிக விஷமுள்ள ஒன்று என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாம்பின் விஷம், உடல் முழுவதும் பரவலாகி ஊடுருவி, பல சிறிய ரத்த கட்டுகளை உருவாக்குவதோடு, பின்னர் ரத்தம் உறையும் திறனை இழக்க செய்துவிடுகிறது. இவ்வாறு இந்த பாம்பு கடிப்பட்டோர் ரத்தம் வழிந்து இறந்துவிடுகிறார்கள்.
இந்த மரப்பாம்பு மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகிறது. வளர்ந்த பாம்பு 100 முதல் 160 சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும். சில பாம்புகள் 183 சென்டிமீட்டர் வரை நீளமாக இருக்கும்.
பச்சோந்தி, மரப்பல்லிகள், தவளைகள், சிலவேளைகளில் சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் கூடு கட்டி வாழும் பறவையின் முட்டைகளை இது உணவாக உட்கொள்கிறது.
சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியால் பின்னர் விவரிக்கப்பட்டதுபோல, ஸ்மிட் அதிக கவனமாக இந்த பாம்பை கையாளும் முயற்சியின்போதுதான் இது அவரை கடித்துள்ளது.
ஸ்மிட்டும், அவரது சகாக்களும் இந்த பாம்பை அதிக விஷமுள்ளதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நம்பப்படுகிறது.
பூம்ஸ்லாங் பாம்பு மிக சிறியதாக இருந்ததும், அது கொத்திய தோலில் 3 மில்லிமீட்டர் ஆழமுடைய காயத்தை மட்டுமே ஏற்படுத்தியதும், பாம்பு கடிப்பட்டவர் நலமாக இருந்ததுமே இதற்கு காரணமாகும்.
ஸ்மிட்டை இந்த பாம்பு கடித்த காலக்கட்டத்தில், அந்த விஷத்தை முறிக்கின்ற மருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிட் சிகிச்சை பெற்றிருந்தாலும் அவர் குணமடையலாம் என்ற நம்பிக்கையோடு மட்டுமே இருந்திருக்கலாம்.
இந்த பாம்பு கடித்த பின்னர், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டு அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் ஸ்மிட் தன்னகத்தே வைத்திருக்கவில்லை. மாறாக, அறியாதோருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளார் என்று 'சையின்ஸ் ஃபிரைடே' தயாரிப்பாளர் தாம்மென்நமாரா கூறியுள்ளார்.