கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேரட் சுவை பிடிக்கும்: ஆராய்ச்சி தகவல்
25 Sep,2022
கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு ‘அல்ட்ரா ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. லண்டன் : தாயின் கருவறையில் வளர்கிற குழந்தைகளுக்கு புற உலக தூண்டல்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானம் காட்டி இருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மைதான். கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சியின்போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் பவுடரைக் கொண்ட கேப்சுல்களை (டியூப் மாத்திரை) வழங்கி விழுங்கச்செய்தார்கள். இன்னும் 35 கர்ப்பிணி பெண்களுக்கு காலே என்று அழைக்கப்படுகிற பரட்டைக்கீரை பவுடரைக் கொண்ட கேப்சுல்களை கொடுத்து விழுங்கச் சொன்னார்கள்.
20 நிமிடங்கள் கழித்து அந்த கர்ப்பிணி பெண்களுக்கு 'அல்ட்ரா ஸ்கேன்' எடுக்கப்பட்டது. அதில் கேரட் கேப்சூல் விழுங்கிய கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் புன்னகைப்பதையும், பரட்டைக்கீரை கேப்சூலை சாப்பிட்ட கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் சிணுங்கி அழுவதுபோல காணப்படுவதையும் கண்டுபிடித்தனர். அதாவது, கேரட் கருக்குழந்தைகளுக்கு பிடித்து, அவர்களைப் புன்னகைக்க வைத்திருக்கிறது. பரட்டைக்கீரை அவர்களை சிணுங்க வைத்திருக்கிறது. கவனியுங்கள். இதில் கருக்குழந்தைகள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களின் தாய்கள்தான் அவற்றை சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அதன் தாக்கம். அவர்களுக்குள் வந்திருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளரும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கரு மற்றும் பிறந்த குழந்தை ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவருமான பெய்சா உஸ்துன் கூறுகையில், "கருக்குழந்தைகள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கிறபோது, தங்கள் தாய்மார்கள் சாப்பிடுகிற உணவுகளின் சுவைகளுக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தை நாங்கள் காட்டி இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும்போது, "கேரட் சுவை வெளிப்படும்போது கருக்குழந்தைகள் சிரிப்பு முகம் காட்டவும், பரட்டைக்கீரை சுவை வெளிப்படும்போது, அவை சிணுங்கும் அழுகை முகம் காட்டவும் அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு சுவைகளை உணரவும், பாகுபடுத்தவும் கருக்குழந்தைகளின் திறன்களின் ஆரம்ப கால ஆதாரங்களை புரிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சிகள் முக்கிய தாக்கங்களை கொண்டுள்ளன" என தெரிவித்தனர்.