ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.
இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பற்றிய ஒரு புதிய ஆய்வு, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் ‘நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்(சிடிசி)’ மூலம் நடத்தப்பட்டது. அதில் வழக்கமான கிருமி நீக்கம் மற்றும் சுத்தம் செய்தாலும் கூட, குரங்கு அம்மை வைரஸ் பொதுவாக வீடுகளில் உள்ள பல பொருட்களில் பல நாட்கள் வரை தங்கியிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும், இது தொற்றுநோயைப் பரப்புமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆய்வுக்காக, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் பகிர்ந்து கொண்ட வீடு மாதிரி எடுக்கப்பட்டது. இரண்டு நோயாளிகளும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, சுமார் ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர்.
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்தில், அவர்கள் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்து, ஒரு நாளைக்கு பல முறை தங்கள் கைகளை கழுவி சுத்தமாக இருந்தனர். அவர்களிடம் நோய்க்கான அறிகுறிகள் தொடங்கிய 20 நாட்களுக்குப் பிறகு, அதிகமாக அவர்களின் தொடர்புள்ள பகுதிகளில் 70 சதவீதத்தில் வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். படுக்கைகள், போர்வைகள், காபி இயந்திரம், கணினி மவுஸ் மற்றும் லைட் சுவிட்ச் ஆகியவற்றில் வைரஸ் கண்டறியப்பட்டது.
எனினும், எந்தவொரு பொருட்களிலும் அல்லது பரப்புகளிலும் நேரடி உயிருள்ள வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆகவே நோய்த்தொற்று இதன்மூலம் பரவக்கூடிய ஆபத்து குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டது. நோயாளிகள் மேற்கொண்ட, சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகள் காரணமாக வீட்டில் உள்ள மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்தியிருக்கலாம். இதனால் வைரஸ் தாக்கம் குறைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீட்டிற்குச் செல்பவர்கள், நன்கு பொருத்தப்பட்ட முகமூடியை அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைத்துள்ளது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீட்டிற்குச் செல்லும் நபர்கள், அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்ப்பதன் மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மேலும், கைகளை சுத்தப்படுத்தி சுகாதாரத்தைப் பேணுதல், உண்ணும் பாத்திரங்கள், உடைகள், படுக்கை அல்லது துண்டுகளைப் பகிர்வதைத் தவிர்த்தல் மற்றும் வீட்டில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பரிந்துரைகளைப் பின்பற்றுதல் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஒரு நபர் வைரசால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் தொடர்பு கொள்ளும்போது வைரஸ் பரவுகிறது. ஒரு நபர் வைரஸால் மாசுபட்ட பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போதும் வைரஸ் பரவுகிறது. உடைந்த தோல் (கண்ணுக்கு தெரியாதிருந்தாலும்), சுவாசப் பாதை அல்லது சளி சவ்வுகள் (கண்கள், மூக்கு அல்லது வாய்) வழியாக வைரஸ் உடலில் நுழைகிறது.
விலங்குகளிடமிருந்து கடி அல்லது கீறல் மூலம் மனிதனுக்கு பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து முதல் முறையாக நாய்க்கு குரங்கு அம்மை பரவியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பாரிஸில் வாழும் ஒரு நபரிடம் இருந்து அவரது செல்லப்பிராணி நாய்க்கு குரங்கு அம்மை பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.