முறை மாமன் - முறைப் பெண் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணங்கள் செய்வது இன்றும் தென் இந்தியாவில் தொடரும் வழக்கமாக உள்ளது. பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் இந்த நெருங்கிய ரத்த உறவு திருமணத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக பிறக்கின்றன.
இந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறப்பதற்கு அவர்களது பெற்றோரின் வம்சாவளியில் கடத்தப்பட்ட குறைபாடு உள்ள மரபணுதான் காரணம் என பிரசாரம் செய்துவருகிறார் 89 வயதான குழந்தைகள் நல மருத்துவர் நேஜோ வர்க்கி.
பெங்களூருவைச் சேர்ந்த நேஜோ, தனது வாழ்நாளில் பெரும்பகுதியைச் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க செலவிட்டவர். பல செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த வர்க்கி, அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் நெருங்கிய ரத்த உறவுத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பதை கவனித்துள்ளார். பிறப்பில் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க பிரச்சாரம் செய்துவந்ததோடு, தனது களஆய்வை 'Stop Marrying Your Niece' என்ற புத்தகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் தொடரும் அவலம்
குறிப்பாக சில தென்னிந்திய மாநிலங்களில் ரத்த உறவு திருமணத்தால் ஏற்படும் செவித்திறன் குறைபாடு, தேசிய அளவை விட அதிகமாக இருப்பதாக கூறும் நேஜோ வர்க்கி, இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆராய்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வுக்கான புள்ளிவிவரங்களை சேகரித்ததாக கூறுகிறார்.
ரத்த சொந்த திருமண உறவு
அத்துடன், இந்தியாவில் 1990 முதல் 2005ம் ஆண்டு வரை பிறந்த செவித்திறன் குறைந்த குழந்தைகள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களையும் கொண்டு இந்த நீண்ட ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார் வர்க்கி.
''கர்நாடகத்தில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளில் 30 சதவீத குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்பட ரத்த உறவு திருமணம் காரணமாக உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் 20 சதவீதம், ஆந்திராவில் 20 சதவீதம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் ரத்த உறவு திருமணம் செய்துகொண்டவர்கள்.
ரத்த உறவு திருமணத்தால் ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக அரசாங்கம் அதிதீவிரமாக வேலைசெய்யவேண்டும். அரசாங்கத்தோடு, நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தவர்களிடம் பேசவேண்டும். பல முன்னேற்றங்களை அடைந்த நம் நாட்டில் இந்த பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதை நாம் தடுக்கவேண்டும்,'' என்கிறார் வர்க்கி.
இந்தியாவில் செவித்திறன் மாற்றுத்திறனாளியாக பிறகும் குழந்தைகளில் 20 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் மூலமாக குறைபாடுள்ள மரபணு செலுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர். அதாவது ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாடுடன் பிறந்ததற்கு ரத்த உறவு திருமணம்தான் காரணம் என்கிறார் அவர்.
பிரிட்டனில் நிலை என்ன?
வர்க்கி சொல்வதை போலவே பிரபல மருத்துவ ஆய்விதழான லான்செட் ஆய்வு இதழில் வெளியான, நெருங்கிய உறவினர் திருமணம் பற்றிய ஆய்வில்(2013) , ரத்த உறவு திருமணத்தால் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
பிரிட்டனில், பிராட்போர்டு பகுதியில், பாகிஸ்தானிய குடும்பங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பிராட்போர்டு பகுதியில் பிறப்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
அதில், 11,300 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு ரத்த உறவு திருமணம்தான் காரணம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
ஆரோக்கியமான மனிதவளம் தேவை
சென்னையில் செயல்படும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ''பிறப்பில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதுதான் காரணம் என்று தெரிந்தும் பலர் அதை தேர்வு செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு கவுரவம் என்றும் குடும்பம் பிரியாது என்றும் கூறுகிறார்கள். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு பல சலுகைகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்றவை தரப்பட்டாலும், சாதிக்குள் நடக்கும் திருமணங்கள், அதிலும் ரத்த சொந்தத்தில் திருமணம் என்பது தொடர்ந்தால், அது ஆரோக்கியமான மனித வளத்தை நம் இந்தியாவுக்கு தராது. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதில் காட்டும் ஆர்வத்தில், பாதியளவு ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதில் காட்டவேண்டும். அதற்கான ஆலோசனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரப்படவேண்டும்,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இந்தியாவில் படித்த குடும்பங்களில் கூட, பிறப்பில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றபோதும், ரத்த உறவில் திருமணம் செய்வது தொடரவே செய்கிறது. இந்த நிலை குறித்து பேராசிரியர் சேகரிடம் கேட்டோம். இவர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் பாப்புலேஷன் சயின்சஸ் (International Institute for Population Sciences) என்ற மனிதவளம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்திய அரசின் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
''தென் இந்தியாவில்தான் தாய்மாமன் உறவில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் அதிகமுள்ளது. அதிலும் பல சமுதாயத்தில், ஒரு பெண்ணின் தந்தையைவிட தாய்மாமன் என்பவருக்குத்தான் அதிக உரிமை உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவில் இன்று நடைமுறையில் உள்ளது. கேரளாவிலும் இந்த பழக்கம் மிகவும் அரிதாகிவிட்டது.''என்கிறார் சேகர்.
மேட்ரிமோனியல் வெப்சைட்கள், அதிலும் சாதி ரீதியாக கூட வெப்சைட்கள் இயங்கும் காலத்தில் நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்யும் பழக்கம் தொடர்வதற்கான முக்கிய காரணம் பணம்தான் என்கிறார்.
''அதிக சொத்து இருப்பவர்கள், திருமணத்திற்கான செலவுகளை அதிகம் செய்யமுடியாதவர்கள் என இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள். முதல் வகையை சேர்ந்தவர்கள், அதிக சொத்துகள் இருப்பதால், தங்களது குடும்பத்திற்குள் அந்த சொத்து இருக்கவேண்டும் என்றும் விவசாய நிலங்கள் தங்கள் கையைவிட்டு போககூடாது, நிலத்தை பிரிக்கவேண்டாம் என்று கருதி ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்கிறார்கள்.அடுத்த வகையை சேர்ந்தவர்கள், உறவுக்கு வெளியே திருமணம் செய்தால், பெண்ணுக்கு அதிக வரதட்சிணை தரவேண்டும், குடும்ப சூழலை கருதி சொந்தத்தில் உள்ள மாப்பிளை என்பதால், காலம் தாழ்த்திகூட செலவுகளை செய்யமுடியும் என்பதால் அந்த வகை திருமணத்தை தேர்வு செய்கிறார்கள்,''என்கிறார்.
திருமணத் தேர்வு என்பதில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் ஆகியவை அடங்கியுள்ளன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொண்டால்தான், குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்கிறார் சேகர்.