கோடை காலத்தில் மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகம் -
14 May,2022
வெப்பநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக வெயில் காரணமாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் முனிக் நகரத்தில் உள்ள ஹெல்ம் ஹோல்ட்ஸ் சென்ட்ரம் முஞ்ச்சன் என்ற ஆய்வு நிறுவனத்தில் வெயிலுக்கும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஆக்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதய சிகிச்சை பெற வந்த 27 ஆயிரம் பேரை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மாரடைப்பு வந்து சிகிச்சைக்காக வந்தவர்கள் எண்ணிக்கையையும் குறிப்பிட்ட நாளின் வெப்ப நிலையையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. 28 ஆண்டு புள்ளிவிவரங்களை 1987 முதல் 2000 ஆண்டு வரை ஒரு பிரிவாகவும் 2001இல் இருந்து 2014 வரை இன்னொரு பிரிவாகவும் இரண்டாக பிரித்து ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ஆரம்பத்தில் இருந்ததை காட்டிலும் ஆண்டுகள் செல்லச்செல்ல மாரடைப்புகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மருத்துவர் கை சென் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பு மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது அண்மைக்காலமாக பரவலாக நிகழ்வது உறுதியாகியுள்ளதாக கை சென் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் இந்த ஆய்வை மேலும் விரிவாக நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்