பக்கவாதத்தின் அறிகுறிகள்
21 Mar,2022
பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது. பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.
மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை உருவாகும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை பகுதியில் உள்ள செல்கள் இறக்க தொடங்கும். மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும்போது அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அப்போது உடல் பகுதி உணர்வற்று பக்கவாதம் ஏற்பட்டுவிடும்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது. பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.
பொதுவாக பக்கவாதம் எந்தவொரு எச்சரிக்கையுமின்றி திடீரென்று வருவதால் அடிப்படை அறிகுறிகளை கண்டறிவது சவாலானதாக இருக்கும். அமெரிக்காவின் தேசிய பக்கவாத சங்கம், ‘பாஸ்ட்’ எனும் நான்கு ஆங்கில எழுத்தின் சுருக்கத்தை கொண்டு பக்கவாத அறிகுறிகளை விவரிக்கிறது. முதல் எழுத்தான ‘எப்’ என்பது முகத்தை (பேஸ்) குறிக்கிறது. முகத்தின் ஒரு பகுதி சோர்வாகவோ, உணர்ச்சியற்றோ, ஒருபக்க மாக சரிவது போல இருந்தாலோ அது பக்கவாத பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி தென்பட்டால் சம்பந்தப்பட்டவரை நன்றாக சிரிக்க சொல்ல வேண்டும். அவர் புன்னகைப்பதற்கு சிரமப்பட்டாலோ, முகம் தளர்ந்து போய் இருந்தாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.
இரண்டாவது எழுத்தான ‘ஏ’, கையை (ஆர்ம்ஸ்) குறிக்கும். அதாவது கை உணர்வற்று இருந்தாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ அது பக்கவாதத்திற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இரு கைகளையும் நன்றாக தூக்க சொல்ல வேண்டும். சரியாக தூக்க முடியாவிட்டாலோ, சட்டென்று கையை கீழே தொங்கவிட்டாலோ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மூன்றாவது எழுத்தான ‘எஸ்’ பேசும் விதத்தை குறிப்பிடும். பேசும்போது வார்த்தைகள் தடுமாறினாலோ, வாய் குழறினாலோ, பேச்சு தெளிவற்று இருந்தாலோ அதுவும் பக்கவாதத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.
நான்காவது எழுத்தான ‘டி’ உடனே செயல்பட வேண்டிய ‘நேரமாக’ கருதப்படும். முதல் மூன்று அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் பக்கவாத பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
இது தவிர கைகள், கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் திடீரென்று உணர்வின்மை அல்லது பலவீனம் ஏற்பட்டாலும் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். இரு கண்களிலும் திடீரென்று பார்வை மங்குதல், தலை சுற்றுதல், கடுமையான தலைவலி தோன்றுதல், நடப்பதற்கு சிரமம், அறிவாற்றல் திறனில் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். அதனால் அந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.