அகால மரணத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகள்..! ஆய்வில் தகவல்
28 Jan,2022
அகால மரணத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகள்..! ஆய்வில் தகவல்
பிறப்பு, இறப்பு பொதுவானது என்றாலும் ஒருவரின் இறப்பு மட்டும் இதுவரை கணிக்க முடியவில்லை. எவ்வளவோ விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், வயது சுழற்சியை மாற்றியமைக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அறிவியலாளர்களின் கூற்றுப்படி, சில அறிகுறிகளை வைத்து இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சோர்வு என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடியது என்றாலும், புதிய ஆய்வின்படி அகலா மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் சோர்வும் ஒன்று எனத் தெரிவித்துள்ளனர். ஜர்னல் ஆஃப் ஜெரோன்டாலஜி: மெடிக்கல் சயின்சஸ் (Journal of Gerontology: Medical Sciences) இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மன மற்றும் உடல் சோர்வு ஒரு நபரின் ஆரம்பகால மரணத்தைக் குறிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் சுமார் 2,906 பேர் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களின் சோர்வு அளவை 1 முதல் 5 வரை என்ற அளவில் அளவிட்டனர். 30 நிமிட நடை, லேசான வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட பராமரிப்பு, கடினமான வேலைகளால் ஏற்படும் சோர்வுகளை வரிசைப்படுத்தினர். இதனையடுத்து, அவர்களின் வயது, பாலினம் உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட ஆய்வாளர்கள், அகால மரணத்துக்கான காரணங்களை பட்டியலிட்டனர். அதன்படி, மனச்சோர்வு முதல் இடத்தையும், வயது அல்லது குணப்படுத்த முடியாத நோய் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.
இந்த ஆய்வை மேற்கொண்ட தொற்று நோயியல் துறையின் இணைப்பேராசிரியர், டபிள்யூ. க்ளின் பேசும்போது, உடல் உழைப்பு மனிதனின் சோர்வைக் குறைப்பதாக தெரிவித்தார். இதனால், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், இந்த ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துபவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தினசரி உடல்உழைப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.