கோவிட்டுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு
07 Dec,2021
‛‛கோவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை தேவையில்லை,'' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதை கோவிட்டால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த சிகிச்சை முறையில் எந்தப் பயனும் இல்லை. இதனால், தீவிர பாதிப்பு கொண்டோர் குணமடைந்ததாகவோ, வென்டிலேட்டரின் தேவை குறைந்ததாகவோ அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை. எனவே, கோவிட் நோயாளிகளுக்கு ப்ளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட க்ளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே இவ்வகை சிகிச்சையை அளிக்கலாம்.
கோவிட் சிகிச்சைக்கு ப்ளாஸ்மாவை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் சிகிச்சையில், தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கோவிட் தொற்றாளர்கள் 16 ஆயிரத்து, 236 நபர்களிடம் நடத்தப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைந்ததாகவும், தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் ப்ளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.