யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நோய். தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.
புற்று நோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்க வழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும்.
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான் ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகை பிடித்தல், ஆஸ்பெட்டாஸ் சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைபிடித்தல், வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)
மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி விடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர். இப்போது எளிதான ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து, நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று ரிஸ்க்தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. புற்றுநோய்க்கு ஆபரேஷன், கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), ரேடியேஷன்(எக்ஸ்ரே ட்ரீட்மென்ட்) ஆகிய 3 சிகிச்சை முறைகள் உள்ளன.