கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு முடிவு
16 Sep,2021
காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளனர். அதேசமயம் வைரசின் தன்மை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூடப்பட்ட அறைகளில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, இரு நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் (ஆறரை அடி) இடைவெளி போதுமானதாக இருக்காது என தெரியவந்துள்ளது.
காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை ‘நிலையான நகரங்கள் மற்றும் சமூகம்’ என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள் மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் அல்லாமல், மூக்கு மற்றும் வாயை முறையாக மறைத்தல், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.