நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது நம் சிறுநீரகம் தான். “இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 900 பேருக்காவது சிறுநீரக நோய்
பிரச்னை உள்ளது” என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்.
சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, குடும்பத்தில் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம். சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது?
ஜீரண மண்டலம் உணவிலிருந்து அதற்குத் தேவையான சத்தை எடுத்துக் கொண்டபின், கழிவுப் பொருட்களை இரத்தத்திலும் குடலிலும் விட்டுவிடுகிறது.
இரத்தம் சிறுநீரகங்களுக்கு சென்றவுடன் அங்கு கழிவுப்பொருட்கள் வடிகட்டப்பட்டு நீருடன் யூரட்டர்கள் மூலம் சிறுநீராக ப்ளாடருக்கு வந்து சேருகிறது. இந்த நிலைக்கு மேல் சிறுநீர் பிரச்சினைகள் வராமல் தடுப்பதில் தசை மற்றும் நரம்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
ப்ளாடரில் இருந்து யுரத்ரா என்னும் துவாரம் மூலமாக சிறுநீர் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் வெளியில் ஒழுகாத வண்ணம் தசைகள் பாதுகாக்கும். எப்பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை ப்ளாடரிலிருக்கும் நரம்புகள் நமக்கு உணர்த்தும்.
ஒருவரின் ப்ளாடர் சரிவர செயல்படுமானால் 600 முதல் 800 மிலி வரை சிறுநீரை பிடித்து வைத்திருக்க முடியும். இருப்பினும் 150 முதல் 300 மிலி சிறுநீர் பிளாடரில் சேர்ந்தவுடனேயே சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படுகிறது.
எதனால் சிறுநீரக மண்டலத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன?
வயதாகுதல், சிறுநீரக மண்டலத்தில் வியாதிகள் இருத்தல் மற்றும் அடிபடுதல் ஆகியவற்றால்தான் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படும்.
வயதாக ஆக சிறுநீரகங்களிலும் மாற்றம் ஏற்படுவதால், சிறுநீரகத்தால் திறம்பட கழிவுகளை அகற்ற முடிவதில்லை.
வயதான நிலையில், யூரட்டர், ப்ளாடர் மற்றும் யூரத்திராவில் உள்ள தசைகளும் இடுப்புத் தசைகளும் தங்கள் வலுவை இழக்கக்கூடும். எனவே சிறுநீரை திறம்பட கட்டுப்படுத்த முடியாமலோ அல்லது சரிவர அகற்ற முடியாமலோ போய்விடும். இதனால் தேவையற்ற நேரத்தில் சிறுநீர் ஒழுகல் ஏற்படும்