ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
26 Jul,2021
..
பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது எவ்வளவு இருக்கிறது என்பதை ஆக்ஸிமீட்டர் கருவியில் எளிதாக கண்டறிந்துவிடலாம்.
உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க சாதனத்தின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது எவ்வளவு இருக்கிறது என்பதை ஆக்ஸிமீட்டர் கருவியில் எளிதாக கண்டறிந்துவிடலாம்.
ஏதாவதொரு விரலை ஆக்ஸிமீட்டர் சாதனத்தில் பொருத்தி, அதில் உள்ள சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். அரை நிமிடத்திற்குள்ளாகவே ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் செறிவு டிஸ்பிளேவில் தெரியும். 95 முதல் 100 என்ற அளவில் இருந்தால் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு ஏதாவதொரு உடல்நலக்குறைபாடு இருக்கும்பட்சத்தில் ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருக்கலாம்.
அந்த சமயத்தில் கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடித்தும், விரித்தும் சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மீண்டும் ஆக்ஸிமீட்டரில் பரிசோதிக்கலாம். ஆனால் ஆக்சிஜன் அளவு 92-93 சதவீதமாக வீழ்ச்சியடைந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமானது. ஏனெனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் நிலையில் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.
அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். அத்தகைய பாதிப்புக்குள்ளாகுபவர்களை காப்பாற்றுவது கடினம். செயற்கை சுவாசம், மரணம் போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி சுயமாகவே பரிசோதித்துக்கொள்ளலாம். அந்த சாதனத்தில் இதய துடிப்பையும் அறிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான நபரின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்க வேண்டும்.