குணமானவர்களில் 4-ல் ஒருவருக்கு இதில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 43 சதவீதம் பேரும் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு பின் பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக சென்னை மாநகராட்சி, நோய் கட்டுப்பாட்டுக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் உள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். இதற்காக பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை அதாவது நோய் குணமடைந்து 12 முதல் 14 வாரம் ஆனவர்களை தேர்வு செய்து அவர்களிடம் தற்போதைய நிலையை கேட்டு அறிந்தனர்.
கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றவர்கள், வேறு பல நோய்கள் இருந்தும் கொரோனாவுக்கு ஆளானவர்கள், வீட்டிலேயே தனிமையில் இருந்து குணமானவர்கள் என 4 பிரிவாக பிரித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்காக நோயில் இருந்து குணமான 1,001 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 405 பேர் ஆண்கள், 596 பேர் பெண்கள்.
அவர்களிடம் கேட்கப்பட்டதில் பெரும்பாலானவர்கள் கொரோனா குணமடைந்ததற்கு பிறகு பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுவதாக கூறினார்கள். அதாவது சளி பிரச்சினை, மூச்சுத்திணறல், சோர்வு, உடல்வலி, முதுகு வலி, முடி உதிர்தல், எடை குறைதல், தூக்கமின்மை, படபடப்பு, மூட்டுவலி, உடல் நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள்.
அதாவது குணமானவர்களில் 4-ல் ஒருவருக்கு இதில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 43 சதவீதம் பேரும் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்கள்.
குறிப்பாக 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு அதிக பின் பாதிப்புகள் இருந்தன. 30 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 24 சதவீதம் பேருக்கு பின் பாதிப்புகள் இருந்தது.
சிலருக்கு நோய் பாதிப்பு அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களுக்கும் பின் பாதிப்புகள் உள்ளன.
குணமானதற்கு பிறகு பாதிப்பு இருப்பதாக கூறியவர்களில் 36.6 சதவீதம் பேர் எடை குறைந்து விட்டதாக தெரிவித்தனர். 30.7 சதவீதம் பேர் முடி உதிர்வதாகவும், 27.3 சதவீதம் பேர் சோர்வாக இருப்பதாகவும், 22.7 சதவீதம் பேர் தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் 14.7 சதவீதம் பேர் நோய் குணமானதற்கு பிறகும் வாசனை நுகர்வு திறன் திரும்ப வரவில்லை என்று தெரிவித்தனர். 6.7 சதவீதம் பேர் தொடர்ந்து மூச்சுத்திணறல் இருப்பதாக கூறினார்கள்.
ஏற்கனவே கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் குணமானதற்கு பிறகும் அதிக பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.