கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இருபாகங்களாக வெளியாகவிருக்கும் தொகுப்பின் முதல் பாகம் இது.
1. தடுப்பூசி எடுத்து கொள்வதற்கு முன் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பினால் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?
பதில்: தடுப்பூசி எடுத்து கொள்வதற்கென குறிப்பிட்ட பரிசோதனை எதுவும் கிடையாது. எந்த நோய் பாதிப்பும் இல்லாத ஒருவர் இதற்காக பிரத்யேகமாக ஏதும் பரிசோதனை செய்துவிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அம்மாதிரியான பரிசோதனைகளும் இல்லை.
2. தடுப்பூசி என்பது முதலில் 45வயதுக்கு அதிகமானவர்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்கள். பின் 18 வயதுக்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றார்கள். அதற்கேற்ப தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டதா?
பதில்: தடுப்பூசி என்பது ஒன்றுதான். இந்தியாவை பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் இரு தடுப்பு மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன ஒன்று கோவாக்ஸின் மற்றொன்று கோவிஷீல்டு. அரசாங்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியதன் காரணம் தடுப்பூசியின் கையிருப்பு.
தடுப்பு மருந்து உருவாக்குவதெற்கென கால அவசகாசம் தேவைப்படுகிறது. எனவே கையிருப்புகளை கணக்கில் வைத்து கொண்டு யாரேல்லாம் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களோ அதன் அடிப்படையில்தான் முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசியின் இருப்பு அதிகரிக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்தி கொள்ளலாம் என்று அரசு கூறியது. எனவே அனைத்து வயதினருக்கும் ஒரே தடுப்பூசிதான். இதில் மாற்றங்கள் ஏதும் இல்லை.
3. தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் வருங்காலத்தில் வைரஸ் உருமாறினால் அதனை எதிர்க்கும் சக்தி தடுப்பூசிகளுக்கு இருக்குமா?
பதில்: முதலில் வைரசின் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் என்பது உருமாறக்கூடிய ஒன்று. இது ஒரு ஆர்என்ஏ வைரஸ் இந்த வகை வைரஸ் என்பது உருமாற்றம் அடைந்து கொண்டுதான் இருக்கும். பயன்பாட்டில் இருக்ககூடிய தடுப்பு மருந்து என்பது உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படாது என்று சொல்வதற்கான எந்த தரவுகளும் இல்லை.
4. இரண்டாம் டோஸ் தடுப்பூசியை புறக்கணித்தால் என்னவாகும்?
பதில்: தடுப்பூசியின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செலுத்தி கொள்ளும் முதல் டோஸ் தடுப்பூசி என்பது எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருக்கக்கூடிய செல்களில் உணர்திறனை உண்டாக்கும். இரண்டாம் டோஸ் என்பதுதான் பூஸ்டர் விளைவை கொடுக்கும். இந்த பூஸ்டர் எபெக்ட்தான் பின்னாளில் நோய் நம்மை தாக்கும்போது எதிர்த்து போராடக்கூடிய வலிமையை தரும். எனவே இப்போதைக்கு இருக்கும் ஆய்வு தகவல்படி இரண்டு டோஸ் போடுவதே நன்மை தரும். பல தரவுகள் முதல் டோஸில் 50 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இரண்டாம் டோஸில் 70-80 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்ற விதிமுறைகள் உள்ளதா?
பதில்: தடுப்பூசியின் கூறுகளுக்கான ஒவ்வாமை கொண்டவர்கள், அலனஃபிலாக்ஸிஸ் என்று சொல்லக்கூடிய குறிப்பிட்ட மருந்துகளுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது. அதைபோல வேறு ஏதேனும் மருந்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்களின் மேற்பார்வையிலோ அல்லது ஆலோசனைபடியோ தடுப்பு மருந்து எடுத்து கொள்ளலாம். அதேபோன்று கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை.
6. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே தடுப்பூசியை செலுத்தி கொண்டால் என்னவாகும்?
பதில்: இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் எங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் ஒன்றுதான். ஏனென்றால் இதனை உருவாக்கக்கூடியவர்கள் ஒரே நிறுவனம்தான். கோவிஷீல்டை பொறுத்தவரை புனேயில் இருக்கக்கூடிய சீரம் இன்ஸ்டியூட் அதனை தயாரிக்கிறது. கோவாக்ஸினை பொறுத்தவரை ஐதரபாத்தில் இருக்கக்கூடிய பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. எனவே இந்தியாவின் எந்த மூளையில் தடுப்பூசியை செலுத்தி கொண்டாலும் அது ஒன்றுதான்.
கொரோனா தடுப்பூசிக்கு கட்டணமா? மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்
கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்
7. இருவேறு தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டால் என்னவாகும்?
பதில்: இதற்கான தரவுகள் நம்மிடம் தற்போது இல்லை. ஆனால் அமெரிக்காவில் சில குறிப்பிட்ட ஆய்வுகள், முதல் டோஸ் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்து செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளலாம் என்று கூறுகிறது. இருப்பினும் இதுகுறித்த விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. எனவே இப்போதைய சூழலுக்கு வெவ்வேறு தடுப்பு மருந்துகளை செலுத்தி கொள்வது பரிந்துரை செய்யப்படவில்லை.
8. கொரோனா வந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டா? உடலில் அந்த வைரஸ் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்காதா?
பதில்: தடுப்பு சக்தியை உருவாக்குவது என்பது ஒன்று நோய் மூலமாக உருவாக்கலாம் மற்றொன்று தடுப்பூசி மூலம் உருவாக்கலாம். இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள்படி கோவிட் வந்தவர்களுக்கு அதற்கான எதிர்ப்பு சக்தி நீண்ட நாட்கள் இருப்பதில்லை. நாட்கள் செல்ல செல்ல அவை மறைந்துவிடுகிறது. எனவே அதற்கு ஒரு பூஸ்டர் தேவை. அதுதான் தடுப்பு மருந்து. எனவே இந்த பூஸ்டர் எஃபெக்ட் உருவாக வேண்டும் என்பதற்காகதான் கொரோனா வந்தவர்கள் மூன்று மாதங்கள் கழித்து தடுப்பு மருந்து செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்போதுதான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
9.இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்து கொண்டபின் அதற்கான தாக்கம் நம் உடலில் எத்தனை நாட்களுக்கு நீடித்து இருக்கும்?
பதில்: இதுகுறித்த பரவலான தரவுகள் நம்மிடம் இல்லை. இருப்பினும் சில ஆய்வுகள் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை பாதுகாப்பு இருக்கலாம் என்று கூறுகிறது. சிலருக்கு ஆண்டிபாடிகள் நல்ல வீரியத்துடன் உருவாகும். சிலருக்கு ஆண்டிபாடிகள் உருவாகுவதில்லை. ஆண்டிபாடிகள் குறித்து பேசும் போது அது ஆறுமாதத்திலிருந்து ஒரு வருட காலம் வரை இருக்கலாம். இருப்பினும் நாம் ஆண்டிபாடிகள் உருவாக்கம் முக்கியமா அல்லது நோய் வராமல் இருப்பது முக்கியமா என்பதை பார்க்கவேண்டும். பெரும்பாலும் தடுப்பூசி எந்த நாடுகளில் எல்லாம் செலுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கொரோனா குறைவாகதான் வந்துள்ளது. அப்படியே வந்தாலும், அது மிதமான தொற்றாகதான் உள்ளது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சாரம்சம். ஆண்டிபாடிகள் இல்லை என்பது ஒரு அளவுகோல் இல்லை. நாம் எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றால் இரு டோஸ் தடுப்பு மருந்துகளையும் செலுத்தி கொண்ட பிறகு கொரோனா வராமல் உள்ளதா அல்லது வந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் உள்ளதா என்பதைதான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் தடுப்பு மருந்தின் நோக்கம்.
தடுப்பு மருந்து என்பது நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கிறது. அதை போல இறப்புகளை குறைக்கிறது.
கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தி கொண்டால் என்னவாகும், தடுப்பூசி போட்டபின் தொற்று ஏற்பட்டால் இரண்டாம் டோஸுக்கான இடைவெளி என்ன போன்ற கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான்.
10. கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் தடுப்பூசி எடுத்து கொண்டால் என்னவாகும்?
பதில்: இதனால் கவலையில்லை. நம் உடல் ஏற்கனவே வைரஸால் எச்சரிக்கப்பட்டுவிட்டது. எனவே அது அமைதியாக அதற்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருக்கும். தடுப்பூசி மிதமிஞ்சிய ஒன்றாகதான் இருக்கும். எனவே அது உடலை எந்த வகையிலும் பாதிக்காது.
11. வேறு ஒரு நோய் காரணமாக மருந்துகள் எடுத்து கொண்டுவந்தால் தடுப்பூசி எடுத்து கொள்ளலாமா?
பதில்: எடுத்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது போன்ற மருந்துகளை எடுத்து கொண்டு வந்தால் நீங்கள் தடுப்பூசி எடுத்து கொள்வதை தள்ளிப் போட வேண்டும்.
12. முதல்முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தொற்று ஏற்பட்டு விட்டால் இரண்டாம் டோஸ் செலுத்தி கொள்ளலாமா அல்லது அதற்கான இடைவெளி எத்தனை மாதங்கள்?
பதில்: தடுப்பூசியை பொறுத்தது. பொதுவாக 4 வாரங்கள். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் இரண்டுக்குமே அதற்கான கால இடைவெளிகள் உள்ளன. கோவிஷீல்டு என்பது ஆஸ்டிராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டால் உருவாக்கப்பட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் இரு டோஸ் தடுப்பு மருந்துக்கான இடைவெளி 12 வாரங்கள் என அதிகரிக்கப்பட்டது. எனவே பெருந்தோற்று வீரியமாக இல்லை என்ற பட்சத்தில் 12 வாரங்கள் வரை இடைவெளி என்பது தவறல்ல.