கொரோனா தடுப்பூசி குறித்து கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான்.
1. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் உடனடியாக பாதிப்பு வரவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புண்டா?
பதில்: இல்லை. தடுப்பு மருந்தை பொறுத்தவரை மூன்று விதமாக எதிர்வினையாற்றும். அவை ஒவ்வாமை, உடலுக்கு கேடு விளைவித்தல், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்னையை உருவாக்குவது. ஒவ்வாமை என்பது வெகு சில நாட்களில் வந்துவிடும். இரு வாரங்களுக்கு பிறகு அந்த எதிர்வினையும் குறைய தொடங்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான எதிர்வினைகள் சில காலத்துக்கு இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் சில புரோதத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பு எதிர்வினையை உருவாக்கும். இது வழக்கத்திற்கு மாறான ஒரு எதிர்வினை. இதை 'ஆட்டோ இம்யூனிட்டி' என்று சொல்வார்கள். இது மிகவும் அரிதானது. அதுபோல ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தொடரலாம். ஒரு மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்தால் எந்த எதிர்வினையும் ஏற்படாது.
2. ஏற்கனவே சைனஸ் மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாமா?
பதில்: ஆம். நிச்சயமாக. அதற்கும் தடுப்பு மருந்தின் மூலக்கூறுகளுக்கும் தொடர்பு இல்லை.
3. இந்த கொரொனா தடுப்பூசிகள் பூஞ்சை தொற்றை தடுக்குமா?
பதில்: நிச்சயமாக இல்லை. இருப்பினும் கோவிட் தொற்று தடுக்கப்பட்டால், கொரோனா தொற்று பாதிப்புடன் தொடர்புடைய நோய்களும் தடுக்கப்படும்.
4. தடுப்பூசியின் வீரியம் வயதுக்கு ஏற்ப வித்தியாசப்படுகிறதா?
பதில்: பொதுவாக அனைத்து தடுப்பு மருந்துகளும் எல்லா வயதினருக்கும் நன்றாகவே செயல்படும். இருப்பினும் கோவிட் தடுப்பு மருந்துகளை பொறுத்தவரை குழந்தைகளின் உடலில் தடுப்பு மருந்து எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதேபோன்று பொதுவாக வயது காரணமாக முதியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சற்று மந்தமாக செயல்படலாம்.
முதல் பாகம்: கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்? - சந்தேகங்களும், பதில்களும்
5. தடுப்பூசி நமது உடலில் எவ்வாறு செயலாற்றுகிறது?
பதில்: ஒரு வைரஸ் உடலில் தொற்றினால், ஆன்டிபாடிகள் மற்றும் டி செல்களின் வழியாக நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் உடல் அதற்கு எதிர்வினையாற்றும். இங்கு பிரச்னை என்னவென்றால், தொற்று உங்களுக்கு நோய் ஏற்படும் ஆபத்தை உண்டாக்கும். அது மிதமானதாகவோ, சற்று அதிகமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். சில சமயம் அது உயிருக்கு அச்சுறுத்தலாகக்கூட இருக்கலாம். அதே வைரஸ் இரண்டாவது முறையாக தொற்று ஏற்படுத்தினால் முன்பு ஏற்பட்ட தொற்றால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி அந்த நோயிலிருந்து நம்மை காக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு கடந்தகால அனுபவத்தை நினைவில் வைக்கும் திறன் உண்டு.
தடுப்பு மருந்து என்பது, நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். நோய் எதிர்ப்பு மண்டலம், வைரஸின் கட்டமைப்பு கூறுகளை அடையாளம் கண்டு நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு எதிர்வினையாற்றும்.
6. RNA, Viral vector, inactivated virus இந்த மூன்று வகையான தடுப்பூசிகளுக்கும் உள்ள வேற்பாடு என்ன?
வைரஸ் என்பது ஒரு கூட்டுக்குள் அடைந்த மரபணு கூறுகளை போல. அது பிற உயிரினங்களின் செல்லுக்குள் நுழைந்தால் மட்டுமே அதன் மரபணு கூறுகள் செயல்படும். அது மட்டுமல்லாமல் அது எந்த உடம்பில் நுழைகிறதோ அந்த உடலின் அதாவது ஹோஸ்ட் செல்களை வைரஸின் ஜீன்களை பயன்படுத்தி வைரஸின் மூலக்கூறுகளை உருவாகக் கோரும்.
கொரோனா வைரஸை பொறுத்தவரை, அதில் உள்ள ஸ்பைக் புரதத்தை (வைரஸின் வரைப்படத்தில், மேற்பரப்பில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்) எதிர்த்துதான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை. ஒரு வைரஸை inactivate செய்தால் அதாவது வைரஸை கொன்றால், அதன் ஸ்பைக் புரதங்கள் அப்படியே இருக்கும் ஆனால் மரபணு கூறுகள் மாற்றம் செய்யப்படும். எனவே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் ஸ்பைக் மற்றும் பிற புரத்திற்கு எதிராக வினையாற்றும்.
மனித உடலில் ஸ்பைக் புரதத்திற்கான ஜீன் கோட்களை நாம் செலுத்தினால் அது ஸ்பைக் புரதத்தை உருவாக்கும். அதன்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அந்த ஜீன் கோட்களை "மெஞ்சர் ஆர்என்ஏ" என்று சொல்வார்கள். அதை சில தடுப்பு மருந்துகளில் பயன்படுத்துவார்கள். அதை செல்லுக்குள் செலுத்தி அதை அடைத்துக் கொள்ளும் வளையங்கள் உருவாக்கப்படும். இந்த வழிமுறையைதான் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகள் செய்கின்றன. அவை ஆர்என்ஏ தடுப்பு மருந்துகள் ஆகும்.
எம்ஆர்என்ஏ-களை கொண்டு வைரஸின் டிஎன்ஏ-கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படும். அந்த டிஎன்ஏக்-கள் உடலில் செலுத்தப்படுவதற்கான வைரஸில் பொறுத்தப்படும். அது அடினோ வைரஸ் என்று அழைக்கப்படும். அடினோ வைரஸ்கள் உடலில் உள்ள செல்களில் செலுத்தப்படும். அதாவது மாதிரி வைரஸ் போன்ற ஒன்று உடலுக்குள் செலுத்தப்பட்டு உடலை நோய்க்கு எதிராக வினையாற்ற தயார்படுத்தும்.
கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்
கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்ன? தடுப்பூசி போட்டபின் உடலில் என்னாகும்?
தடுப்பூசி எடுத்து கொண்டபின்னும் கொரோனா வருவது ஏன்? வருட வருடா கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் பிசிஜி ஆய்வகங்களின் இயக்குநர் மருத்துவர் சேகர்.
7. வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எனக்கு அறிகுறிகள் இருந்து நான் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகளையும் எடுத்து கொண்டேன். இப்போது நான் கொரோனா வந்தவர்களை போல மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டுமா?
பதில்: அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்கிறது. முடிந்தவரை விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். அறிகுறிகளை மட்டும் வைத்து ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா இல்லையா என்று கூற இயலாது. ஆர்டிபிசிஆர் அல்லது சிடி ஸ்கேனில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களை தவிர்த்து பிறர், தடுப்பூசி கிடைக்கும் சமயத்தில் உடனடியாக செலுத்தி கொள்ளலாம்.
8. தடுப்பூசி போட்டப்பின்னும் தொற்றால் பாதிக்கப்படுவது ஏன்?
பதில்: தடுப்பு மருந்தின் செயல்பாடு என்பது தொற்று வராமல் தடுப்பது என்பது இல்லை. தொற்றை மோசமாக்கி மருத்துவமனைக்கு செல்வது போன்ற நிலையையோ அல்லது இறப்பை ஏற்படுத்துவது போன்ற சூழலையோ தடுப்பதுதான் தடுப்பு மருந்தின் முக்கிய நோக்கம்.
ஆய்வுகளின் முடிவுகள்படி தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களில் மிக மிக குறைந்த சதவீதத்தில்தான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலேயும் மருத்துவமனைகள் செல்லும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வெகு குறைவு. அவர்கள் குணமாகி வந்துவிடும் நிலைதான் உண்டு. தடுப்பு மருந்து செலுத்தி மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டால் அதை நாம் தடுப்பூசியின் தோல்வி என்று எடுத்து கொள்ளகூடாது.
9. வருடா வருடம் தடுப்பூசி போட வேண்டும் என்ற செய்தி வருகிறதே, ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமா?
பதில்: இப்போதைக்கு இதுகுறித்து நமக்கு எந்த தகவலும் இல்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஃபுளூ தடுப்பு மருந்துகள் உண்டு. அது கொரோனா வைரஸை போன்று உருமாறக்கூடிய வைரஸ் ஆகும். எனவே அதன் உருமாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி தயாரித்து செலுத்துவார்கள். ஆனால் கொரோனாவை பொறுத்தவரையில் இன்றைய நிலையில் அவ்வாறு எதுவும் இல்லை.
10. தைராய்டு மற்றும் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ளலாமா?
பதில்: பொதுவாக தீவிர நோய் பாதிப்பிலிருந்து வெளியே வந்தவர்கள், தீவிர மாரடைப்பு போன்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டாம் என்றும் சிறிது காலம் கழித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு நீண்ட நாட்கள் ஆனவர்களுக்கோ தைராய்டு உள்ளவர்களோ தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டாம் என்று கூறப்படவில்லை. இந்தியாவை பொறுத்தவரை 21 கோடி பேருக்கு நாம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். இதில் பெரிதாக பக்க விளைவுகள் ஏதும் இல்லை. எனவே தைராய்டு, நீரிழிவு, அதீத ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
11. பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாமா?
பதில்: பாலூட்டும் தாய்மார்கள் நிச்சயமாக தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். குழந்தை பேறு நடந்து 4 வாரங்களிலிருந்து 6 வாரங்கள் கழித்து தடுப்பூசி எடுத்து கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி பரிந்துரைக்க வேண்டும் என மருத்துவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை அதற்கான வழிகாட்டுதல்கள் வரவில்லை. ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.