மனிதர்களின் வாழ்நாளை 150 வயது வரை நீட்டிக்கலாம்: விஞ்ஞானிகள்
03 Jun,2021
'மனிதர்களின் வாழ்நாளை 120-150 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்' என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜிரோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி பைர்கவ் தலைமையிலான குழு மனிதர்களின் வாழ்நாள் நீடிப்பு குறித்த ஆய்வறிக்கையை 'நேச்சர் கம்யூனிகேஷன்' இதழில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதர்களிடம் ரத்த அணுக்களின் இழப்பை ஈடு செய்யும் திறன் 35-45 வயதில் குறையத் துவங்குகிறது. இந்த பிரச்னை மனிதர்களின் வாழ்நாளை சுருக்கி விடுகிறது. வயது அதிகரிக்கும் போது அழியும் ரத்த அணுக்களுக்கான நிகராக புதிய செல்களை உருவாக்கும் திறன் குறைகிறது. ஒருகட்டத்தில் செல்கள் உருவாவது முற்றிலும் முடங்கும் போது மரணம் நிகழ்கிறது.
இந்த ஆய்வில் ஒருவரின் உடல் புதிய செல்களை உருவாக்கும் திறனை முற்றிலுமாக இழக்க 120-150 ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ரத்த அணுக்கள் இழப்பிற்கு ஏற்ப புதிய செல்களை உருவாக்கும் திறனை அதிகரித்தால் ஒருவர் 150 ஆண்டுகள் வரை வாழலாம். எனவே வருங்காலத்தில் ரத்த அணுக்கள் அழியும் வேகத்தை குறைத்து புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.