தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்கவும் தகுந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்காகவும் புதிய சிகிச்சை நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மரணங்களைக் குறைக்கலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது.
தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மிக வேகமாக நிரம்பிவருகின்றன. படுக்கைகள் கிடைப்பதற்கு பல மருத்துவமனைகளில் வெகு நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களும் நோய் உறுதிசெய்யப்பட்டவர்களும் பதற்றத்தின் காரணமாக உடனடியாக பெரிய மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால், மிகத் தீவிரமான நிலையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு படுக்கையும் இடமும் கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. இதனால், தீவிர நோயாளிகள் படுக்கைகள் கிடைக்காமல் மரணமடைய நேரிடுகிறது. இதன் காரணமாகவே புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இந்த நெறிமுறைகளின்படி நோயின் கடுமை, அறிகுறிகளை வைத்து நோயாளிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் செறிவு 96க்கு மேலே உள்ள நபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
முதல் நிலை நோயாளிகள்
ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வறட்சி, இருமல், சுவை இன்மை போன்ற அறிகுறிகள் இருந்து, ஆக்ஸிஜன் செறிவு 96க்கு மேலே இருந்தால், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதில்லை.
அவர்களுக்கு உடனடியாக ஐவர்மெக்டின், அஸித்ரோமைஸின், வைட்டமின் சி, ஸிங்க் மாத்திரைகளை 3 முதல் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும். பாரசிடமால் மாத்திரைகளை நான்கு முறை அளிக்க வேண்டும். நாளின் பெரும்பகுதியை குப்புறப்படுத்திருக்கச் செய்ய வேண்டும். நிலைமை மோசமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இரண்டாம் நிலை நோயாளிகள்
நோய்க் குறிகள் என்னவாக இருந்தாலும் ஆக்ஸிஜன் செறிவு 96 - 95 நிலையில் இருப்பவர்கள் இரண்டாம் நிலை நோயாளிகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு மேலே சொன்னதைப் போல, உடனடியாக ஐவர்மெக்டின், அஸித்ரோமைஸின், வைட்டமின் சி, ஸிங்க் மாத்திரைகளை 3 முதல் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும். பாரசிடமால் மாத்திரைகளை நான்கு முறை அளிக்க வேண்டும். அவர்களை குப்புறப்படுக்கச் செய்திருக்க வேண்டும்.
கூடுதலாக, மெதில் ப்ரெட்னிஸ்லோன் அல்லது டெக்ஸாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டுகளை மாத்திரை வடிவில் அளிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற ஸ்டீராய்டுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே இந்த ஸ்டீராய்டுகளை கொடுப்பதன் மூலம் மரணங்களைத் தடுக்கலாம் எனக் கருதுகிறது சுகாதாரத் துறை.
இந்த நிலை நோயாளிகள் கோவிட் கேர் மையங்களில் வைத்துப் பராமரிக்கப்படுவார்கள். நிலைமை சற்றே மோசமானாலும் உடனடியாக ஆக்ஸிஜன் வசதியுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்.
மூன்றாம் நிலை நோயாளிகள்
கோவிட் சோதனையில் அந்நோய் இருப்பதாகத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும் ஆக்ஸிஜன் செறிவு 90 - 94 நிலையில் இருப்பவர்கள் மூன்றாம் நிலை நோயாளிகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிமிடத்திற்கு 4 லிட்டர் ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்.
ஐவர்மெக்டின், அஸித்ரோமைஸின், வைட்டமின் சி, ஸிங்க் மாத்திரைகளை 3 முதல் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும். பாரசிடமால் மாத்திரைகளை நான்கு முறை அளிக்க வேண்டும். கூடுதலாக, மெதில் ப்ரெட்னிஸ்லோன் அல்லது டெக்ஸாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டுகளை மாத்திரை வடிவில் அளிக்க வேண்டும்.
தவிர, தீவிர நோயாளிகளுக்கான லோ மாலிக்யூலர் ஹெப்பரின், ரிவெரோக்ஸபான் உள்ளிட்ட மருந்துகளை அளிக்க வேண்டும். செறிவு 90க்குக் கீழே சென்றால் உடனடியாக பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும்.நான்காம் நிலை நோயாளிகள்
ஆக்ஸிஜன் செறிவு 90க்குக் கீழே உள்ள நோயாளிகள் நான்காம் நிலை நோயாளிகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் அளித்துவர வேண்டும். நிலைமை மேம்படவில்லையென்றால் சிறப்பு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டும்.
ஒன்று மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள நோயாளிகளின் ஆக்ஸிஜன் செறிவு 94க்குக் கீழே குறையும்பட்சத்தில் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படலாம். செறிவு 90க்கும் கீழே செல்லும்போது அவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 48 மணி நேரத்திற்கு மேல் ஆக்ஸிஜன் செறிவு 92க்கு மேல் இருந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். இந்த நோயாளிகள் அனைவருமே, உடலுழைப்பைத் தவிர்க்க வேண்டும். எளிய உணவுகளை உண்ண வேண்டும். தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் அளவைக் கண்காணித்து வர வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இதற்கிடையில் ஐவர்மெக்டின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. சோதனை முயற்சிகளுக்காகத் தவிர, வேறு எதற்காகவும் இந்த மருந்தை கோவிட் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டியதில்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்த ஐவர்மெக்டின் மருந்து வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க அளிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சிறிய அளவிலான பின்விளைவுகளும் உண்டு.
அதேபோல, மெதில் ப்ரெட்னிஸ்லோன், டெக்ஸாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டுகளை ஆரம்ப நிலையிலேயே அளிப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
"இந்த மருத்துவ வழிகாட்டு நெறிமுறை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளுக்கு நோய் தீவிரமாக, மரணத்தை நோக்கிச் செல்லாமல் தடுக்க இந்த மருந்தை ஆரம்ப நிலையிலேயே பரிந்துரை செய்கிறோம். இதனை அரசு மருத்துவமனைகளே நோயாளிகளுக்கு அளிக்கும். கடைகளில் வாங்க முடியாது" என்கிறார் இந்த வழிமுறையை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவரான டாக்டர் பரந்தாமன்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறை, 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று திங்களன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.