.
கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் கடுமையாக உள்ளதால் பல குடும்பங்கள் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் இல்லாமலும்
புதைப்பதற்கும் இடம் இல்லாமல் பரிதாபமாக திண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வழக்குகுள் பதிவாகி வரும் நிலையில் பலர் தங்களுக்கு கொரோனா தான் உள்ளதோ என்ற பயத்திலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மேலும் ஒருவருக்கு கோவிட் -19 சோதனை தேவையா இல்லையா என்பதை அறிய, கொரோனா அறிகுறிகளுள் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தவுடன் உங்கள் உடல் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்வது முதல் படிகளில் ஒன்றாகும்.
அடுத்த கட்டமாக நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்த்து கொள்ளலாம், அப்படி சரிபார்க்க 6 நிமிட சோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் அதிகமான இறப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் செறிவு ஆகும். முக்கியமாக கோவிட் ஹைப்போக்ஸியாவை ஏற்படுத்தி, பல உயிர்களைப் பறித்துள்ளது. ஹைப்போக்ஸியா என்பது உடலில் போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலையாகும், பெரும்பாலும் இதற்கென்று தனித்துவமான அறிகுறிகள் எதுவம் இல்லையென்றாலும் கோவிட் தொற்று ஏற்பட்டதும், ஆரம்பத்திலேயே உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கவனித்து வந்தால், இதைத் தவிர்க்கலாம். இதற்கு 6 நிமிட சோதனை பெரிதும் உதவியாக இருக்கும்.
மகாராஷ்டிராவில், திடீரென்று கோவிட் வழக்குகள் பெருமளவில் அதிகரித்ததையும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் தொடர்ந்து, 6 நிமிட சோதனைக்கு உட்படுத்தி நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க மாநில அரசு மக்களைக் கேட்டுக் கொண்டது. அதுவும் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட அறிக்கையின் படி, லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் 6MWT (6-Minute Walk Test) சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிகுறிகளை அனுபவிக்கும் ஒருவர் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன் படி, கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டும் ஒருவர் ஆக்ஸிமீட்டரின் உதவியுடன் அவர்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்திருக்கும் போதே, சமமான மேற்பரப்பில் ஆறு நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆறு நிமிடங்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் அளவு குறையவில்லை என்றால், அந்த நபர் ஆரோக்கியமாக கருதப்படுவார்.
ஒருவேளை ஆக்சிஜன் அளவு 93 க்குக் கீழே அல்லது 3 சதவிகிதம் குறைந்துவிட்டால் அல்லது நீங்கள் மூச்சுத் திணறலை அனுபவித்தால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் நுரையீரல் செயல்பாட்டை சரிபார்க்க 6-க்கு பதிலாக 3 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும். அமெரிக்க நுரையீரல் கழகத்தின் கூற்றுப்படி, இந்த சோதனை இதயம், நுரையீரல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள் குறித்த பதிலைக் கண்காணிக்க உதவும்.