சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது முதன்முறையாக கண்டறியப்பட்டு உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. ஆனால், வேறு சில நாடுகளில் அதற்கு முன்பே இந்த வைரசானது தடம் பதித்துள்ளது என்ற தகவலும் வெளியானது.
அதற்கு சான்றாக, அந்நாடுகளில் இருந்து பெறப்பட்ட கழிவுநீர் பரிசோதனை முடிவுகள் அமைந்தன.
ஸ்பானிஷ் புளூ
கடந்த 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் புளூ பெருந்தொற்று உலக நாடுகளை மரணத்தில் மூழ்கடித்தது. இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் பறிபோயின. உலக போர்களை காட்டிலும் அதிக உயிர்ப்பலி கொண்டிருந்தது.
பெயருக்கேற்றாற்போல், இந்த ஸ்பானிஷ் புளூவானது முதலில் ஸ்பெயின் நாட்டில் தோன்றவில்லை. வேறு சில நாடுகளில் முதலில் தோன்றிய தொற்றானது அந்நாடுகளால் பாதுகாப்புக்காக மறைக்கப்பட்டன. ஆனால், ஸ்பெயின் நாடு உலகிற்கு இதனை முதலில் அறிவித்தது.
அதன்பின்னர் அந்த நாட்டின் பெயருடன் தொற்று வியாதியின் பெயரும் ஒட்டி கொண்டது.
சார்ஸ்-கோவி-2
ஆனால், கடுமையான சுவாச பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொரோனா வைரஸ் 2 (சார்ஸ்-கோவி-2) எனப்படும் கோவிட்-19 வைரசானது ஏற்படுத்தி வரும் சுகாதார நெருக்கடி, கடந்த நூற்றாண்டில் தோன்றிய ஸ்பானிஷ் புளூவுக்கு பின்னர் கண்டறியப்படவில்லை.
இதுபற்றி அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் இக்னேசியோ மார்ட்டின்-லோச்சஸ் தலைமையிலான மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டது.
இதன்பின் இக்னேசியோ கூறும்பொழுது, சர்வதேச அளவில் வைரசின் மீது கவனம் செலுத்தப்பட்டபோதிலும், வைரசின் சிக்கல்களை பற்றி மட்டுமே நாம் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளோம்.
புதிய வகை
அடுக்கடுக்காக கிடைத்து வரும் சான்றுகளின் அடிப்படையில், இதற்கு முன் அறியப்படாத தொற்றுதன்மை கொண்ட புதிய வகை வைரசாகவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கென தனி பண்புகள் உள்ளன. நோய் ஏற்படுத்துவதற்கான தனித்துவ இயல்புகளை கொண்டுள்ளன. அதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்பொழுது, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கூறுகிறோம்.
அப்படியென்றால், மனிதர்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய பிற கொரோனா வைரசுகளை பற்றி நம் அறிவுக்கு எட்டியதன் அடிப்படையில் அளித்து வரும் நடைமுறையில் உள்ள சிறந்த சிகிச்சை முறைகளை கைவிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
வெவ்வேறு பாலினம், வயது, பாரம்பரியம், முன்பே உள்ள இணை நோய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்பொழுதுள்ள சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்னென்ன மேம்படுத்த வேண்டும் என்ற விவரங்களை அறிந்து அதற்கேற்ப, அடுத்தடுத்து போதிய சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரசின் தனித்துவம்
குறைவான நோய்த்தொற்று ஏற்படுத்த கூடிய, மனித கொரோனா வைரசின் உட்பிரிவுகளானது, சுவாச பாதையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு ஜலதோஷம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படுத்த கூடிய, சார்ஸ் மற்றும் ஏ.ஆர்.டி.எஸ். போன்ற வைரசுகள் சுவாச பாதையின் கீழ் பகுதியில் அமர்ந்து கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசானது, மேல் மற்றும் கீழ் சுவாச பாதைகளில் தொற்று ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதற்கான சான்றுகள் அதிகம் கிடைத்துள்ளன.
இவை தவிர பல உறுப்புகளில் பாதிப்பு, ரத்த உறைவு மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவது போன்ற வழக்கத்திற்கு மாறாக பிற வைரசுகளில் காணப்படாத தனித்துவ பண்புகளை இந்த வகை வைரசுகள் கொண்டுள்ளன.
இதுபோன்ற காரணங்களால், தொற்று ஏற்பட்ட பின்னரும் சிலருக்கு நீண்டகால கொரோனா பாதிப்புக்கான அனுபவம் ஏற்படுவது மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.