ஒரு சி டி ஸ்கேன் எடுப்பது சுமார் 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்றும் சி டி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசிய கருத்து காட்டுத்தீபோல் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சி டி ஸ்கேன் எடுத்துள்ள நிலையில், ரந்தீப் குலேரியாவின் கருத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி இருப்பவர்களில், ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்ட பின்னர், ஒரு சிலருக்கு நெகடிவ் என்ற முடிவு வந்தாலும், அறிகுறிகள் நீடிக்கின்றன. இந்த சிக்கலான சமயத்தில் உண்மையில் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று அறிவதற்காக சி டி ஸ்கேன் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் உறுதியான முடிவு தெரியாத நிலையில், சி டி ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக கூறும் மருத்துவர்கள், கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிடி ஸ்கேன் பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசியதற்கு வேறு காரணங்களும் உள்ளன என்கிறார்கள்.
முதலில், ஒரு சி டி ஸ்கேன் எடுத்தால் அது 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்ற குலேரியாவின் கூற்றை பற்றி ரேடியோலஜிஸ்ட்(கதிரியக்க நிபுணர்) மருத்துவர்களிடம் பேசினோம்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ரேடியோலஜி துறையின் தலைவர் அமர்நாத்திடம் கேட்டோம். ''சி டி ஸ்கேன் எடுப்பதற்கு முதலில் மருத்துவரின் பரிந்துரை தேவை. அதிகபட்ச அபாயத்தை தடுப்பதற்குதான் சி டி ஸ்கேன் எடுக்கவேண்டும். சி டி ஸ்கேன் எடுக்கும்போது கதிர்வீச்சு ஏற்படுவது உண்மை.
ஆனால் குலேரியா சொல்வதைபோல 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்று சொல்வது தவறு. 40 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலைமை இருந்தது. ஒரு வேலை குலேரியா மருத்துவ மாணவராக இருந்தபோது அப்போதிருந்த சிடி ஸ்கேன் இயந்திரம் அத்தகைய கதிர்வீச்சு அளவு கொண்டதாக இருந்திருக்கும்.
தற்போது உள்ள சிடி ஸ்கேன் உபகரணங்கள் குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்டவை. உயிரை காப்பதற்காக மட்டுமே சி டி ஸ்கேன் எடுக்கிறோம். ஒருமுறை ஸ்கேன் எடுத்துவிட்டால் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிடும் என்று புரிந்து கொள்ளகூடாது. புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கும். சிடி ஸ்கேன்தான் பிரதான வாய்ப்பு என்று சொல்லமுடியாது,''என்கிறார்.
சி டி ஸ்கேன் கதிர்வீச்சின் அளவு குறித்து விளக்கம் கேட்டபோது, ''தற்போதுள்ள சி டி ஸ்கேன் இயந்திரத்தில் கொரோனாவுக்காக எடுக்கப்படும் ஸ்கேனில் அல்ட்ரா லோ டோஸ் ஸ்கேன் என்ற முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, ஒரு சி டி ஸ்கேன் என்பது குறைந்தபட்சம் 30 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்று சொல்லலாம். அதிலும், தற்போது கொரோனா பாதிப்பை கண்டறிய முடியவில்லை என்ற நிலையில் மக்கள் எடுக்கிறார்கள். தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுக்கும் நபர்களாக அவர்கள் இருப்பதில்லை. ஒரு சிலர் தங்களது வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்திருக்கலாம்,''என்கிறார்.
மேலும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பு எவ்வளவு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது என்கிறார் அமர்நாத். சி டி ஸ்கேன் எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொல்ல முடியாது என்கிறார்.
''அடிப்படையில் குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. இளம் வயதினர் அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எடுப்பதால் அவர்களுக்கு உடனே தீவிரமான சிகிச்சை தேவையா அல்லது மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று தெரிந்துவிடும். ஆனால் தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுப்பதை எந்த மருத்துவரும் பரிந்துரை செய்வதில்லை,''என்கிறார் அமர்நாத்.
குலேரியாவின் கருத்தால் ஒருபுறம் அச்சம் நிலவினாலும், மக்கள் மத்தியில் சிடி ஸ்கேன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
''கொரோனா அதிகரித்துள்ள காலத்தில், பல தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனே சிடி ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். அவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டதும் எடுக்கச் சொல்கிறார்கள்.
கடந்த ஒரு வருட காலத்தில் பணம் கொழிக்கும் இடமாக சிடி ஸ்கேன் மையங்கள் மாறிவிட்டன. சிடி ஸ்கேன் மூலம் அதிகப்படியான கதிர்வீச்சு ஏற்படுவது உண்மை. குறைவான கொரோனா பாதிப்புள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிடி ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது,''என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
''மூச்சுதிணறல் அதிகமாக உள்ளவர்கள், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னரும் அந்த பிரச்னை தொடர்கிறது என்றால் எடுக்கலாம். ஆக்சிஜன் செறிவு நிலை (oxygen saturation level) குறைவாக உள்ள நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை செய்யப்படுகிறது.
கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அந்த நபருக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கின்றன என்ற சமயத்தில் எடுக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் வருமானத்தை பெறுவதற்காக அச்சத்தில் உள்ள மக்களிடம் பணம் பிடுங்க சிடி ஸ்கேன் என்ற வலை விரிக்கிறார்கள். குலேரியாவின் கருத்து ஓரளவு இத்தகைய மக்களை உஷாராக்கும். ஆனால் குலேரியா கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டம் அலையின் உச்சத்தில் இதை சொல்வதற்கு பதிலாக, முன்னதாகவே சொல்லியிருக்கலாம்,''என்கிறார் அவர்.
புகழேந்தியின் கூற்றுக்கு ஏற்றார் போல், தமிழகத்தின் முன்னணி அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனியார் ஸ்கேன் மையங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையுடன் வந்து மருத்துவமனையில் அனுமதிக்க கோருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜிவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
''தினமும் குறைந்தது சுமார் 50 பேராவது சிடி ஸ்கேன் எடுத்து வந்து, உடனே உள்நோயாளியாக அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் எவ்வாறு எளிதாக ஸ்கேன் எடுத்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. தனியார் ஸ்கேன் மையங்களில் செல்ப் என்று சொல்லி ஸ்கேன் எடுத்ததாக சொல்கிறார்கள். அதிக பாதிப்புள்ளவர்களுக்குதான் இங்கு சிகிச்சை தரமுடியும். மற்றவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். ஆனால் சி டி ஸ்கேனை காட்டி அனுமதிக்க பலர் கோருகிறார்கள். செல்ப் ஸ்கேன் ஆபத்தானது,''என்கிறார் தேரணிராஜன்.
சி டி ஸ்கேன் பற்றி குலேரியாவின் பேசியது ஏன்?
சிடி ஸ்கேன் பற்றிய விவரங்களை சேகரித்தபோது, இந்த சமயத்தில் ஏன் குலேரியா சிடி ஸ்கேன் பற்றி பேசினார் என்ற கேள்வியும் எழுந்தது. பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர்கள் குலேரியா பேசியதற்காக காரணங்களை தெரிவித்தார்கள். ''எங்கள் விவரங்களை வெளியிடாதீர்கள்.
உண்மையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான சிக்கல்கள் நீடிக்கின்றன. எங்கு பார்த்தாலும், மக்கள் வெள்ளம். ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் வர மூன்று நாட்கள் ஆகின்றன.
சிடி ஸ்கேன் எடுத்தால் ஐந்து நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடும். இதனால், டெல்லியில் ஆயிரக்கணக்கவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க குவிகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தொற்று நோய் துறை மற்றும் ரேடியோலஜி துறைக்கும் பனிப்போர் நடக்கிறது. மக்கள் கூட்டத்தை ஓரளவாவது குறைக்கவேண்டிய சூழல் இங்குள்ளது.
குலேரியாவின் கருத்து அச்சம் தந்தாலும், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் குலேரியா இவ்வாறு சொல்லியிருக்கிறார். வடமாநிலங்கள் சில மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட நவீன சிடி ஸ்கேன் வசதி இல்லை,''என்கிறார் மருத்துவர்கள்.
ஆனால் மருத்துவர்கள் கூறும் இந்த கூற்றை உறுதிப்படுத்த குலேரியாவிடம் பேச முயற்சித்தோம். அவரை அணுக முடியவில்லை.