கோவிட்-19 தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு, தடுப்பூசி குறித்த பயம் என தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் திடீர் திடீரென்று உலா வரும் செய்திகள் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. அந்த வகையில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு CRP என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற செய்தி பரவத் தொடங்கியுள்ளது.
`கோவிஷீல்டு, கோவாக்சின் என எந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பரிசோதனை மையத்தில் CRP (C-reactive Protein Test) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். பரிசோதனைக்கான கட்டணம் தோராயமாக ரூ.300-தான் இருக்கும். இந்தப் பரிசோதனை உங்கள் ரத்தத்தில் ஏதேனும் தொற்று இருந்தால் அதனை வெளிக்காட்டிவிடும்.
ரத்தத்தில் தொற்றுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பல்வேறு விளைவுகள ஏற்படுத்தலாம். அதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு இந்தப் பிரிசோதனையைத் தயவுசெய்து செய்துகொள்ளுங்கள்” என்று நிறைவடைகிறது அந்த வாட்ஸ்அப் செய்தி. இதயநோய் மருத்துவர் எனக் குறிப்பிட்டு ஒருவரின் பெயருடன் அந்தச் செய்தி பகிரப்பட்டதால் பலரும் அது உண்மையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
கோவிட்-19 தடுப்பூசி குறித்த எந்த வழிகாட்டு நெறிமுறைகளிலும் CRP பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
இதய மருத்துவர் பி.ஜெயபாண்டியன்
கோவிட் தடுப்பூசிக்கு முன்பு CRP பரிசோதனை அவசியமா என்ற கேள்வியுடன் இதய மருத்துவர் பி.ஜெயபாண்டியனிடம் பேசினோம்:
“C-reactive Protein என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒருவகைப் புரதம். உடலில் தொற்றோ, அழற்சியோ ஏற்படும்போது அதற்கு எதிர்வினையாற்றி கல்லீரல், சி.ஆர்.பி புரதத்தை வெளியேற்றி ரத்தத்துக்குள் அனுப்பும்.
CRP என்பது உடலில் ஏதேனும் அழற்சி (Inflammation), தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் காட்டும் குறியீடு. அழற்சி இதயம், கைகால், நுரையீரல் என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். உடலில் நகப்பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டு, புண்ணாகி, தொற்று ஏற்பட்டாலும், இதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் சி.ஆர்.பி. குறியீடு பாசிட்டிவ் என்று காண்பிக்கும்.
Blood testBlood test
பாசிட்டிவ் என்பதில் மிதமான பாசிட்டிவ், மீடியம் பாசிட்டிவ், அதிக பாசிட்டிவ் என்று பல்வேறு நிலைகள் உள்ளன. சாதாரண சளி இருப்பவர்களுக்குக்கூட மிதமான பாசிட்டிவ் என்ற முடிவு காட்டலாம். மேலும் இது ஒவ்வாமையைக் கண்டறியாது. அதனால் இந்தப் பரிசோதனை என்பது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.
யாருக்குத் தேவை?
சாதாரண காய்ச்சல் வந்தாலும் அதில் பாசிட்டிவ் என்றுதான் வரும். உடலில் அழற்சியோ, தொற்றோ ஏற்பட்டாலும் அதே பாசிட்டிவ்தான் காட்டும். உதாரணத்துக்கு ஒரு நோயாளி மூட்டுவலி என்ற பிரச்னையோடு வந்தால் அவருக்கு ஏதேனும் அழற்சி இருக்கிறதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். நோய், அறிகுறிகள் அல்லது பிரச்னையின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கு அந்தப் பரிசோதனை தேவையா என்பதை மருத்துவர்தான் தீர்மானிப்பார்.
100 பேருக்கு சி.ஆர்.பி. பரிசோதனை மேற்கொண்டால் பெரும்பாலானவர்களுக்கு பாசிட்டிவ் என்றுதான் காட்டும். சி.ஆர்.பி. முடிவைப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் தவறானது. சி.ஆர்.பி முடிவை மட்டும் எடுத்துக்கொண்டு தடுப்பூசி போடச் செல்ல வேண்டும் என்பது தேவையில்லாதது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.
கோவிட்-19 தடுப்பூசி குறித்த எந்த வழிகாட்டு நெறிமுறைகளிலும் CRP பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் (Anticoagulant) மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோயாளிகள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். இதய நோயாளிகளுக்கு அதுவும் கட்டாயமல்ல. குழப்பம் உள்ளவர்கள் மட்டும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.
இப்போது பரவிக்கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் முதல் அலையின்போது பரவிய வைரஸைவிட 60 சதவிகிதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. அதனால்தான் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அரிதாகத்தான் வீட்டிலுள்ள மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது. ஆனால் இப்போது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தடுப்பூசி என்ற பாதுகாப்புக் கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்வது நல்லது” என்கிறார்.
இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள சூழலில் தடுப்பூசியைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதும், மருத்துவ அறிவியலுக்குப் பொருந்தாத விஷயங்களைப் பரப்புவதும் பலரைத் தவறான திசைக்குத் திருப்பும். குறைந்தபட்சம் இதுபோன்று பரவும் தகவல்களை உறுதிசெய்யாமல் அடுத்தவருக்கு ஃபார்வேர்டு செய்வதையாவது தவிர்க்கலாமே!