கொரோனா தாக்கத்துக்கு வழிவகுக்கும் உடற்பருமன்
05 Mar,2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸின் இரண்டாவது, மூன்றாவது அலைகளைத் தாண்டி தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தடுப்பு மருந்துகள் பல நாடுகளில் விநியோகிக்கப்பட்டு குடிமக்களுக்கு செலுத்தப்படுவதால் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது.
பெரும்பாலும் நாள்பட்ட நோய்த் தாக்கம் கொண்டவர்கள், வயோதிகர்கள் உள்ளிட்டவர்களை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குகிறது என மருத்துவர்கள் தெரிவித்தபோதிலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எளிதில் ஆளாகின்றனர். உடற்பருமன், இதயக் கோளாறு, சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் கொரோனா வைரஸையும் எளிதில் உடலுக்குள் கொண்டுவரும் என தற்போது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. உலக உடற்பருமன் அமைப்பு தற்போது இதுகுறித்த ஒர் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.
எந்த நாட்டில் உடற்பருமன் கொண்டவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனரோ அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இயல்பைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. துரித உணவுகள், மசாலா உணவுகள் உட்கொள்பவர்கள், மதுப்பழக்கம் கொண்டவர்கள் ஆகியோர் உடற்பருமனுடன் காணப்படுகின்றனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை உடல் பருமனுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கும் உள்ள ஒற்றுமை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் உடல் பருமனானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 160 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. எந்தெந்த நாடுகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் உடல் பருமனோடு உள்ளனரோ அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது