கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிற சில நோயாளிகள், திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விடுவதையும், அதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடுவதையும் பார்க்க முடிகிறது. இனி இந்த ஆபத்தான நிலையை தவிர்த்து விட முடியும். இதற்காக அதிவேக ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஒரு நாளில் கூட கொரோனா நோயாளிக்கு இந்த அதிவேக ரத்த பரிசோதனை செய்து, அவருக்கு ஆபத்து நேர வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணித்து விடலாம். இதனால் உடனடி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வழி பிறந்துள்ளது.
இதுபற்றிய தகவல்களை விஞ்ஞானிகள், ஜே.சி.ஐ. இன்சைட் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, செல்களில் இருந்து மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ., வெளியேறி ரத்த ஓட்டத்தில் பரவுகிறது என்பது உடலில் ஒரு வகை செல் மரணம் நிகழப்போவதை அடையாளம் காட்டுகிறது என தெரிவிக்கின்றனர்.
இது பற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆண்ட்ரூ இ கெல்மேன் கூறி இருப்பதாவது:-
கொரோனா நோயாளிகளின் நிலையை சீக்கிரமாக மதிப்பிடுவதற்கு டாக்டர்களுக்கு சிறந்த கருவிகள் தேவை. ஏனென்றால், குறைவான சிகிச்சைகள்தான் உள்ளன. சில நோயாளிகள் தீவிர சிகிச்சை இல்லாமல் சிறப்பாக குணம் அடைந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் சில நோயாளிகள், அவர்களின் வயதை பொருட்படுத்தாமல் அல்லது சில சந்தர்ப்பங்களில் அடிப்படை ஆரோக்கியத்தைப் பொருட்படுத்தாமல், மரண சுழலுக்கு செல்வது ஏன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு காரணம், செல்களில் இருந்து வெளியேறுகிற மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ., ஒரு அழற்சி மூலக்கூறு என்பதால் திசு சேதம், இந்த மரண சுழலுக்கு ஒரு காரணமாக அமைகிறது என்பதை எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா நோயாளிகளில், நுரையீரல், இதயம் மற்றும் சிறு நீரகங்களில் இந்த வகை செல் மற்றும் திசு சேதத்துக்கு முந்தைய சான்றுகள் உள்ளன. ரத்தத்தில் உள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ.யின் நடவடிக்கைகள், முக்கிய உறுப்புகளில் செல் மரணம் ஏற்படுவதற்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த அதிவேக ரத்த பரிசோதனையை ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடித்து விடலாம். கொரோனாவை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரத்தின் மூலமாகவே பரிசோதித்து விடலாம்.
ரத்தத்தில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்காமல், நோயாளியின் ரத்த மாதிரியில் இருந்து மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. அளவை நேரடியாக அளவிட இந்த முறை உதவுகிறதாம்.