வயிற்று உபாதை தீர கேழ்வரகு கூழ்!
மலத் துவாரத்தில் எந்த தொந்தரவு ஏற்பட்டாலும், அதை, ‘மூலம்’ அதாவது, ‘பைல்ஸ்’ என்று நினைக்கிறோம். ஆனால், ஆசனவாயில் மூலம், பவுத்திரம், வெடிப்புகள் என, ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் வெவ்வேறானவை.
மூலம் என்பது, மலக்குடலின் உட்சுவரில் உள்ள ரத்தக் குழாய்கள் புடைத்து தொங்குவதால் ஏற்படுகிறது. இதில் உள் மூலம், வெளி மூலம் என்ற இரு வகைகளுண்டு.
மலம் கழித்த பின் சொட்டு சொட்டாக ரத்தக் கசிவு இருந்தாலோ, அதன் தொடர்ச்சியாக சில மாதங்கள் கழித்து மலம் கழிக்கும் போது, திராட்சை கொத்து போல ஆசனவாயை விட்டு வெளியே வரும் போது, மூலம் தோன்றியுள்ளது என்பதை கணித்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு, மலம் கழித்த பின்னும் வெளியே தோன்றும். ஒரு சில சமயங்களில், தொடர்ந்து மூலம் வெளியில் இருப்பதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.
மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் ரத்தக் கசிவு, அதன்பின் எரிச்சல், வலி என, உபாதைகள் தொடர்ச்சியாக இருக்கும். ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்படுவதால், ரத்த சோகை ஏற்பட்டு, களைப்பான உணர்வு, உடல் எடை குறைந்து விடும்.
ரத்தக் கசிவு ஏற்பட்ட இடத்தில் நுண் கிருமிகள் தாக்கினால், எப்போதும் வலி இருந்தபடியே இருக்கும்; அதோடு, பசை போன்ற திரவம் சுரந்து, உள்ளாடைகளை நனைத்து, அரிப்பை ஏற்படுத்தும். மேலும், ஆசனவாயில் ஏதோ ஒரு பொருள் வைத்து அடைத்தது போல, உணர்வு இருந்தபடியே இருக்கும்.
மூலம் ஏற்பட முக்கிய காரணம் மலச்சிக்கல் தான். ஒரு சிலருக்கு பரம்பரையாகவும் தோன்றுவதுண்டு. கல்லீரல் பிரச்னைகள், உள்ளுறுப்புகளில் கட்டிகள் போன்றவை வளர்ந்து, மலக்குடலை அழுத்தும் போது, மூலம் தோன்றுவது உண்டு.
கர்ப்பிணியருக்கு, கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் மூலம் தோன்றலாம்;
பிரசவத்திற்கு பின் சரியாகி விடும். நீண்ட நேரம், ஒரே இடத்தில் நின்றோ, உட்கார்ந்தோ பணி செய்பவர்களுக்கு மூலம் அதிகமாக பாதிப்பை உருவாக்குகிறது.
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தான் நிவாரணம் என்று நினைப்பது தவறு. அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் தோன்றும் போது, மாற்று மருத்துவத்திற்கு வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை, ஆசனவாய் பிரச்னையை சரிசெய்ய, நல்ல மருந்துகள் உள்ளன.
ஆசனவாய் தொந்தரவுகளுக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவில் கேழ்வரகு கூழ் குடிப்பது, நல்ல பலனைத் தரும்.
டாக்டர் ஆர்.ஞானசம்பந்தன்,
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர்,
சென்னை.
96771 55933