தடுப்பூசி அலர்ஜியானால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்கள் வெளியீடு
20 Dec,2020
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், அது ஒவ்வாமை ஏற்படுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.
விரிவான பரிசோதனைகளுக்கு பிறகு அமெரிக்காவில் 2 தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இரண்டுமே அமெரிக்க நிறுவனங்கள் ஆகும். ஒன்று பைசர் மற்றும் பையோஎன்டெக் நிறுவன தடுப்பூசி, மற்றொன்று மாடர்னாவின் தடுப்பூசி. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், வயதானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீரக, குடல் நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவர்களில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அவற்றை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. தடுப்பூசி ஒவ்வாமை ஏற்படுத்தினால் செய்ய வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
அதில், “முதல் மருந்து செலுத்தப்பட்ட பின் எபினெப்ரைன் மருந்து செலுத்தும் தேவை ஏற்பட்டால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டால் 2-வது மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனா தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை உள்ளவர்கள் அத்தடுப்பூசியை தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளது.