பல வண்ண எக்ஸ்ரே!
18 Dec,2020
நோய்களை அறிவதற்கு மிகவும் உதவும் எக்ஸ்ரே, 21ம் நுாற்றாண்டுக்கு ஏற்றபடி மாறவிருக்கிறது. ஆம், கருப்பு வெள்ளைப் படமாகவே இருந்த எக்ஸ்ரே, பலவண்ணம் காட்டும் படமாகப்போகிறது. அதுமட்டுமல்ல, முப்பரிமாணத்திலும் உடலுக்குள் உள்ள பகுதிகளை காட்டும் என்பதோடு, அந்த முப்பரிமாண எக்ஸ்ரேவை, மருத்துவர்கள் தேவைக்கேற்றபடி குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்க்க முடியும்.
நியூசிலாந்தை சேர்ந்த, 'மார்ஸ் பயோ இமேஜிங்' உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம், 'மெடிபிக்ஸ் - 3' என்ற சிறப்பு சிலிக்கன் சில்லை மூளையாக கொண்டு இயங்குகிறது. நோயாளியின் உடலில் பாய்ச்சப்படும் எக்ஸ்ரே, எலும்பு, தசை மற்றும் மென்திசுக்களைக் கடந்து செல்கையில் மாறுதல் அடைகிறது. இந்த மாறுதலை, மெடிபிக்ஸ் - 3 சில்லும் அதன் மென்பொருளும் மிக துல்லியமாக அலசி, ஒரு படத்தை உருவாக்குகின்றது.
பலவண்ண முப்பரிமாண எக்ஸ்ரேயின் துல்லியமும், அதில் கிடைக்கும் கூடுதல் விபரங்களும் மருத்துவர்களுக்கு எந்த அளவு உதவுகின்றன என்பதை, தற்போது மார்ஸ் பயோ இமேஜிங் விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். விரைவில், பலவண்ண எக்ஸ்ரே பரவலாகும் என எதிர்பார்க்கலாம்,