இறந்தவர்களின் உடல்கள் மூலம் கொரோனா பரவுமா? தொற்றுநோயியல் நிபுணர் தெரிவிப்பது என்ன?
16 Dec,2020
உடல்களை புதைப்பதால் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என தெரிவிக்கப்படுவதை உலகின் மிகவும் பிரபலமான தொற்றுநோயியல் மற்றும் நோயியல் நிபுணர் மலிக் பீரிஸ் நிராகரித்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை புதைப்பதால் வைரஸ் பரவலாம் என தெரிவிப்பது விஞ்ஞானபூர்வமான கருத்தில்லை என தற்போது ஹொங்கொங் பல்கலைகழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை பேராசிரியராக உள்ள மலிக் பீரிஸ்குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ்களிற்கு உயிர்வாழும் செல்கள் அவசியம் என தெரிவித்துள்ள அவர் எபோலா போன்ற பக்டீரியாக்கள் மாத்திரம் வித்தியாசமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் உயிரிழந்ததும் அவரது செல்கள் இறந்துவிடும் வைரசும் இறந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை நேரடியாக ஓடும் நீரில் புதைக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் ஆறடியில் நீர்கசிவு ஏற்படமுடியாதவகையில் சுற்றப்பட்டு ஆறடி நிலத்திற்குள் புதைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ள மலிக் பீரிஸ் ஏதாவது காரணத்தினால் உடலில் வைரஸ் தொடர்ந்து காணப்பட்டாலும் அந்த வைரஸ் பல அடுக்கு மண்ணை கடந்து நீரிற்குள் செல்வது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
உடல்களை புதைக்கும் நடவடிக்கை எனக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இல்லவேயில்லை எனவும் தெரிவித்துள்ளார்.