சுலபமாக தொற்று
மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற உறுப்புக்களை விட, நுரையீரல் நேரடியாக சுவாசிக்கும் காற்றுக்கு தொடர்புடையது. அதாவது நாம் சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று, பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்ததின் மூலம் செல்கிறது.எனவே தொற்று கிருமிகள் (பாக்டீரியா, வைரஸ், புஞ்சை), காசநோய் கிருமி, கொரோனா கிருமி போன்றவை நேரடியாக நுரையீரலுக்கு சென்று சுலபமாக நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது.
காச நோய், கொரோனா நோயுற்றவர் இருமும் போது கிருமியுடன் சேர்ந்த சளித்துகளின் மூலம் மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றுடன் கலந்து விடுகிறது. அது நுரையீரலுக்குள் சென்று தொற்று ஏற்படுத்துகிறது.காற்றில் கலந்துள்ள துாசி, புகை, ரசாயன பொருட்கள், கொடிய வாயுக்களை நேரடியாக சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு சென்று பாதிப்பை உண்டாக்குகிறது.இவை உணர்த்துவது என்னவென்றால் அதிகரித்து வரும் மாசுக்காற்று, பெருகி வரும் கிருமிகள் கலந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் நோய்கள் உலகளவில் பெருகிவருகிறது என்பதே.
காரணம் என்ன
பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும் நுரையீரல் நோய்கள்.
1. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
2. ஆஸ்துமா
3. நிமோனியா
4. காசநோய்
5. நுரையீரல் புற்று நோய்
6. குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல்
7. தொழில் சார்ந்த நுரையீரல் நோய்கள்.
உலகளவில் 200 கோடி மக்கள் விறகு அடுப்பு, கரி அடுப்பு மூலம் ஏற்படும் புகையினால் பாதிக்கப்படுகின்றனர். 100 கோடி மக்கள் மாசுக்காற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.2016 கணக்கெடுப்பின்படி உலகில் 25.1 கோடி மக்கள் சி.ஒ.பி.டி. என்னும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர்.
முதலில் புகைப்பிடிப்பவர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர். தற்போது புகை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த நோய் ஏற்படுகிறது. காற்றில் மாசு, வாயு, புகை மற்றவர் புகைபிடிப்பதில் இருந்து வெளியாகும் புகை போன்றவை பாதிப்பை உண்டாக்குகின்றன. இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறிகள். உலகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலில் சி.ஒ.பி.டி. ஐந்தாம் இடத்தில் உள்ளது. 2030 ல் இந்நோயானது உயிரிழப்பின் காரணப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆஸ்துமா
உலகில் 33.9 கோடி மக்கள், இந்தியாவில் 3.7 கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு ள்ளனர். காற்றில் உள்ள துாசி மற்றும் ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. பூக்களின் மகரந்தம், பூஞ்சான், புகை, விலங்குகளின் ரோமம், கரப்பான்பூச்சி, துாசி, உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் பொருட்கள் போன்றவை அலர்ஜியை ஏற்படுத்த காரணம் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு 'அலர்ஜிக் ரைனைடிஸ்' எனும் நோய் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
தும்மல், மூக்கில் அரிப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு அறிகுறிகள்.ஒவ்வாமை காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து அவற்றை தடுப்பதன் மூலம் ஆஸ்துமா இல்லாமல் வாழலாம்.2016 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 28 லட்சம் மக்கள் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது சளி துகள்கள் மூலம் பாக்டீரியா காற்றில் வெளியேறி மற்றவர்கள் அதை சுவாசிக்கும் பொழுது அவர்களின் நுரையீலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இக்கிருமி உடலுக்குள்ளேயே பல ஆண்டுகள் கூட நோயை ஏற்படுத்தாமல் இருக்க வாய்ப்பு உண்டு.ஒருவரின் எதிர்ப்புசக்தி குறையும் பொழுது நோயாக மாறி பிரச்னையை உண்டாக்குகிறது. மனித உறுப்புகளில் நுரையீரலே காச நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இந்நோயை நெஞ்சு எக்ஸ்ரே, சளி பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
நிமோனியா
நிமோனியா என்பது நுரையீரல் தொற்று நோய். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சான் போன்ற கிருமிகளால் நிமோனியா உண்டாகும். இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். குழந்தை இறப்புக்கு அதிகப்படியான காரணம் நிமோனியா. ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர்.இந்நோயின் காரணத்திற்கு ஏற்ப ஆன்ட்டி பயாடிக், ஆன்ட்டி வைரல், ஆன்ட்டி பங்கல் மூலம் நோய் குணப்படுத்தப்படும்.
உலகளவில் 2018 கணக்கெடுப்பின்படி 96 லட்சம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளனர். அதில் 17 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளனர். புற்றுநோய்களில் அதிக பாதிப்பை உண்டாக்கும் நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய்.இருமல், சளி, நெஞ்சுவலி, சளியில் ரத்தம், நெஞ்சில் நீர் கோர்த்தல் பசியின்மை, எடைகுறைவு போன்றவை அறிகுறிகள்.
இப்போது கொரோனா
நுரையீரல் தொற்று நோயில் இப்போது மக்களால் பெரிதும் அறியப்படுவது, நம்மை தாக்கி கொண்டிருக்கும் கொரோனா. கொரோனா கிருமி மனித குலத்திற்கு புதியது அல்ல. ஏற்கனவே 2002ல் சார்ஸ், 2014 ல் மெர்ஸ் நோய்கள் ஒருவித கொரோனா கிருமிகளால் உண்டானவை. பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது, பேசும்போது சளி துகள் காற்றில் கலந்து மற்றவர் சுவாசிக்கும் பொழுது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது. அறிகுறிகளே இல்லாமலும், சிலருக்கு லேசான அறிகுறிகளுடனும் தாக்குகிறது. சிலருக்கே தீவிர நிமோனியா உருவாகி நுரையீரல் பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
காப்பது எப்படி
கொரோனாவிற்கு தடுப்பூசி ஆராய்ச்சி அளவில் இருந்தாலும், பிற நுரையீரல் நோய்கள் சிலவற்றிற்கு தடுப்பூசிகள் உண்டு. உரியகாலத்தில் அவற்றை இடுவது அவசியம். துாய காற்றை சுவாசிக்க வேண்டும். புகை, மாசுக்காற்று உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.
சத்துமிக்க உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலம் நுரையீரல், இதயம் செயல்பாடு மேம்படும். நீரழிவு, இருதய நோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவை நுரையீரல் நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து அதை தவிர்த்து கொள்வது நல்லது.
கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் வாழ்வதை தவிர்க்கவேண்டும்.இன்றைய காலத்தில் நமது நுரையீரலை காப்பதே முக்கியம். நுரையீரல் தொற்று நோய்களை தவிர்க்க முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிக அவசியம்.