‘ஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகவும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கண்டுபிடிக்கவும் இரவு, பகலாக ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மும்பை செவன் ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ஸ்டீம் தெரபி’ அளித்து சிகிச்சை அளித்து அதனால் ஏற்படுகிற விளைவுகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.
அதென்ன ‘ஸ்டீம் தெரபி’ என்று புருவத்தை சுருக்காதீர்கள். ஒன்றுமில்லை. ஆவி பிடிப்பதுதான் ‘ஸ்டீம் தெரபி’.
டாக்டர் திலீப் பவார் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.
எந்த அறிகுறிகளும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களுக்கு இந்த ‘ஸ்டீம் தெரபி’ 7 நாட்களுக்குள் கொரோனா வைரசை கொல்வதும், அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் தெரிய வந்துள்ளது.
கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று மும்பையில் அசுர வேகம் எடுத்த தருணத்தில், பிற நோய்களுக்கு தரக்கூடிய மருந்துகளை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சோதனை ரீதியில் அளித்துக்கொண்டிருந்த தருணத்தில்தான் டாக்டர்கள் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.
இதுபற்றி டாக்டர் திலீப் பவார் இப்படி கூறுகிறார்ஸ
“முதலில் கொரோனா நோயாளிகளுக்கு டோசிலிஜூமாப் ஊசி மருந்தை கொடுக்க முயற்சித்தோம். அதில் 80 சதவீத நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பற்றி நாங்கள் விரிவாக கற்று தெரிந்து கொள்ள முடிவு எடுத்தோம்.
அதில் நாங்கள் கொரோனா வைரசானது, மூக்கு, வாய், கண்கள் என 3 வழிகளில் மனிதர்களின் உடல்களுக்குள் நுழைகிறது என்பதை கண்டுபிடித்தோம்.
பொதுவாக நமது பாரம்பரியப்படி ஜலதோஷம் பிடித்தாலோ, சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டாலோ ஆவி பிடித்து நீராவியை உள்ளுக்குள் இழுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
ஆனால் சளியை நீராவி தளர்த்தும்; நாசி பத்திகளைத் திறந்து சளி அழற்சியை குறைக்கிறது அல்லது வெப்பம் வைரஸ்களின் நகலெடுப்பை தடுக்கிறது என்ற நிரூபிக்கப்படாத தகவல்களுடன் நடைமுறை சான்றுகள் பலவீனமாக உள்ளன.
நீராவியை பொறுத்தமட்டில் அது 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. இது கொரோனா வைரசின் உறுதியற்ற வெப்ப நிலையை விட அதிக வெப்பம் ஆகும்.
மேலும் வைரஸ்கள் 56 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொல்லப்படும் என்பது தெரிந்த ஒன்று.
கொரோனா அறிகுறிகளற்று லேசான, மிதமான தாக்குதலுக்கு ஆளாகி இருந்த 105 பேரை உள்ளடக்கி இரண்டு குழுக்களைக் கொண்டு ஆய்வு நடத்தினோம்.
முதல் குழுவில் சுகாதார பணியாளர்கள் இருந்தார்கள். 2-வது குழுவில் அறிகுறிகள் கொண்ட சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட நோயாளிகள் இருந்தார்கள்.
முதல் குழுவினர் தினமும் இரு முறை தலா 5 நிமிடங்கள் வீதம் ஆவி பிடிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் மூக்கு வழியாக நீராவியை உள்ளிழுக்குமாறும், வாய் வழியாக சுவாசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இரண்டாவது குழுவினர் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தலா 5 நிமிடங்கள் ஆவிபிடித்து மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுக்குமாறு கூறப்பட்டனர்.
இதன் பின்னர் முதல் குழுவில் இருந்த எந்த நோயாளிகளும் 14 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை பின்தொடர்ந்து கண்காணித்ததில் கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
இரண்டாவது குழுவினர் லேசானஅறிகுறிகள் உடையவர்கள் 3 நாளில் இயல்பு நிலைக்கு திரும்பினர். மிதமான அறிகுறிகள் இருந்தவர்கள் 7 முதல் 10 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.
இதில் ஆவி பிடித்தவர்கள் ‘ஸ்டீம் தெரபி’க்கு பின்னர் நல்ல முன்னேற்றம் அடைந்தது நிரூபணமானது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவவும் இல்லை”.
இப்படி சொல்கிறார் டாக்டர் திலீப் பவார்.
ஆக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாரம்பரிய வழக்கப்படி ஆவி பிடித்தும் தீர்வு காணலாம் என்பதற்கு இந்த ஆய்வு சான்றாக அமைந்துள்ளது.